மலிவு விலையில் காய்கறிகள் - இயற்கை விவசாயத்தில் அசத்தும் மதுரை இளைஞர்கள்

By செய்திப்பிரிவு

மதுரை: அனைவருக்கும் மலிவு விலையில் நஞ்சில்லா காய்கறிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 5 பேர் இணைந்து இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்து வருகின்றனர்.

உணவு உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தியதன் விளைவை தற்போது அனுபவித்து வருகிறோம். மண் வளம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டால் பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன.

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களிலிருந்து பெறும் தானியங்கள், காய்கறிகளை உண்ணும் மனிதர்கள் பலவித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இது தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், தற்போது இயற்கை முறை விவசாயத்தின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. அதே நேரம் இயற்கை முறை விவசாயத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், தானியங்களின் விலை ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் விளைபொருட்களின் விலையைவிட கூடுதலாக இருக்கிறது. இதனால் நஞ்சில்லா காய்கறிகளை வசதியுள்ளவர்கள் மட்டுமே வாங்கி நுகரும் நிலை உள்ளது.

நஞ்சில்லா பொருட்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 5 பேர் இணைந்து ‘ஆர்கானிக் குட்’ என்ற பெயரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூழலியல் செயற்பாட்டாளர் பிரசாந்த் தலைமையில் விவசாயி ஜாபர், தையல் கலைஞர் பாலாஜி, பெயின்டர் மதன், காவலர் அலெக்ஸ் ஆகியோர் மதுரை அருகே உலகநேரியில் 8 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் பிரசாந்த் (40) கூறியதாவது: மதுரை மாவட்டம் முழுவதும் 11 ஆண்டுகளில் ‘மரம் மதுரை’ என்ற அமைப்பு சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்துள்ளோம். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், அவற்றை சாமானியர்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

நஞ்சில்லா காய்கறிகளை அனைவரும் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஆர்கானிக் குட்’ என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி நாங்கள் 5 பேரும் செயல்பட்டு வருகிறோம். கத்தரி, தக்காளி, வெண்டை, வெங்காயம், கொத்தவரை, செடி அவரை, காராமணி, தர்ப்பூசணி, பந்தல் பயிர்களான புடலை, சுரை, பீர்க்கை உட்பட 17 வகையான காய்கறிகளை விளைவிக்கிறோம்.

விளைவித்த பொருட்களை நியாயமான விலையில் விற்க அரசு உழவர் சந்தைக்கு மட்டுமே அனுப்புகிறோம். தேடி வருவோருக்கு முன்னுரிமை அளித்து விலை குறைத்து கொடுக்கிறோம். அடுத்ததாக மேலும் 30 ரக காய்கறிகளை விளைவிக்க திட்டமிட்டுள்ளோம். இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுகள் அவசியம் என்பதால் புலிக்குளம் மாடு வைத்துள்ளோம்.

இதன் மூலம் பஞ்சகாவ்யா உள்ளிட்ட இயற்கை உரங்களை தயாரித்து பயிருக்கு பயன்படுத்துகிறோம். பூச்சிகளை கட்டுப்படுத்த சூரியகாந்தி மற்றும் மஞ்சள் நிறத்தில் பூக்கும் பயறுவகை பயிர்களை வரப்புகளில் வைத்து கட்டுப்படுத்துகிறோம். பூச்சிகளை பிடிக்க நூற்றுக்கணக்கான பறவைகள் வருகின்றன.

எங்களது எண்ணத்துக்கு ஆதரவாக போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தினர் 8 ஏக்கர் நிலம் கொடுத்து உதவியுள்ளனர். களையெடுப்பு, பராமரிப்பு பணிகளில் உலகநேரி, அம்மாபட்டி கிராமப் பெண்கள் உறுதுணையாக உள்ளனர். எங்களது தோட்டத்தில் இயற்கைச் சூழல் நிலவுவதால் மயில்களும், பறவைகளும் இரைதேடி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE