குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் 29 ஆயிரம் சுருணை ஏடுகள்

By செய்திப்பிரிவு

மதுரை: இந்து சமய அறநிலையத் துறையின் சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் கரூர் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் 29 ஆயிரம் சுருணை ஏடுகளை கண்டறிந்துள்ளனர். இதில் கோயில் தேவஸ்தானம் நீதிமன்றமாகச் செயல்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட 46,020 கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க ‘திருக்கோயில்கள் / மடங்களின் ஓலைச்சுவடிகள் பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கத் திட்ட’ பணிக்காக 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவினர் இதுவரை 282 கோயில்களில் கள ஆய்வு செய்து 29 செப்பு பட்டயங்கள், 1,80,280 சுருணை ஓலைகள், 351 இலக்கியச் சுவடிக் கட்டுகள், 2 வெள்ளி ஏடு, ஒரு தங்க ஏடு ஆகியவற்றை கண்டறிந்துள்ளனர்.

திட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் ஆய்வாளர்கள் கோ.விஸ்வநாதன், நா.நீலகண்டன் ஆகியோர் கரூர் குளித்தலை அருகே சிவாயத்திலுள்ள சிவபுரீஸ்வரர் கோயிலில் கள ஆய்வு செய்தனர். அப்போது, ராஜகோபுரத்தின் 2-வது தளத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுருணை ஏடுகளை கண்டறிந்தனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: சிவபுரீஸ்வரர் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் சிவாயம் கோயில் பற்றிய பல வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. சுருணை ஏடு என்பது இலக்கிய ஏடுகளின் அளவில் இருந்து மாறுபட்டதாகும். இவை சுமார் 100 செ.மீ. நீளம் வரை உள்ளன.

இந்த சுருணை ஏடுகளில் சொத்து விவரம், கோயில் வரவு- செலவு கணக்கு விவரம், அலுவல் குறிப்புகள், நில குத்தகை முறைகள், நில தானம், பூசை முறை, பண்டாரக் குறிப்புகள், அந்த கால நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இக்கோயிலில் இறைவனுக்கு திருப்பணி செய்யும் தேவதாசிகள் இருந்துள்ளனர். இவர்களுக்கு கோயிலுக்குச் சொந்தமான 3 காணி நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேவதாசிகள் நடனம் ஆடும்போது மேளம் அடிக்க தனியாக மேளக்காரர்களும் இருந்துள்ளனர். அவர்களுக்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அதோடு, தேவதாசிகளுக்கு கோயிலில் பரிவட்டம் கட்டும் வழக்கமும் இருந்துள்ளது.

கி.பி.1,846 காலகட்டங்களில் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயில் கும்பினியார் (ஆங்கிலேயர்) சர்க்காருக்குக் கீழ் இருந்துள்ளது. கி.பி.19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அய்யர்மலை ரத்தின கிரீஸ்வரர்கோயில் சிவாயம் சிவபுரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் இணைந்துள்ளது. அய்யர் மலைக்கோயிலை சிவாயம் மலைக்கோயில் என்றே அழைத்துள்ளனர்.

அக்காலகட்டத்தில் சிவாயம் கோயில் தேவஸ்தானம், நீதிமன்றம்போல் செயல்பட்டுள்ளது. அங்கு பல்வேறு வழக்குகள் சர்க்கார் சார்பில் விசாரிக்கப்பட்டுள்ளன. சிவாயம் தேவஸ்தானத்தில் ஸ்தானிகராக இருந்த வீரபத்திரன் பிள்ளை என்பவர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

அதுபோல், அப்புவய்யன் என்ற பணியாளர் குளித்தலை பெருமாள் கோயில், கடம்பர் கோயில், ஈஸ்வரன் கோயில் உள்பட பல கோயில்களில் பணி செய்துள்ளதை விசாரித்தும், அப்படி பணிபுரிந்திருந்தால் அவருக்கு 3 மாத சம்பளம் வழங்குவது குறித்து தீர்ப்பு வழங்கிய குறிப்பும் உள்ளன. இவ்வாறு பல அரிய செய்திகள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள சுருணை ஏடுகள் முழுவதையும் ஆய்வு செய்தால் சிவாயம் கோயில் சார்ந்த பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE