கோவை: வாழை விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கவும், லாபம் கிடைக்கவும் பிரத்யேக திட்டங்கள் உள்ளதாக இயற்கை விவசாய ஆர்வலரும், மனுநீதி பவுண்டேஷன் தலைவருமான மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சராசரியாக 1.1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. 39.39 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. கோவையில் மட்டும் ஏறத்தாழ 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் காரமடை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன் பாளையம், பொள்ளாச்சி , சூலூர், சுல்தான்பேட்டை, ஆனைமலை , சிறுமுகை, மதுக்கரை உள்ளிட்ட இடங்கள் வாழை பயிரிடும் முக்கிய இடங்களாகும்.
ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை சாகுபடியை நம்பி உள்ளனர். சாகுபடி செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காதது, சந்தை விற்பனையில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். இச்சூழலில் வாழை விவசாயிகள் லாபம் கிடைக்கும் வகையில் பிரத்யேக திட்டங்கள் உள்ளதாக இயற்கை விவசாய ஆர்வலரும், மனுநீதி பவுண்டேஷனின் தலைவருமான மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: வாழை சாகுபடியில் சிறு, குறு விவசாயிகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது. வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய விலை, லாபத் தொகை கிடைக்க திசு வளர்ப்பு முறை, மேட்டுப்பாத்தி முறை, இயற்கை நுண்ணூட்ட உரம், சந்தைப்படுத்துதல் முறை, இடைக்கன் முறை ஆகிய திட்டங்கள் எங்களிடம் உள்ளன.
திசு வளர்ப்பு முறை என்பது நல்ல வளமான நிறைய பழங்கள் கொடுத்த வாழை மரத்திலிருந்து திசு எடுத்து அதை தொழில் நுட்பத்தின் மூலம் வளர்த்து வாழைக் கன்றாக மாற்றும் முறையாகும். சில பிரத்யேக நிறுவனங்கள் இந்த முறையை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.
‘மேட்டுப்பாத்தி’ முறை என்பது, நடவு செய்யும் பகுதியில் மண்ணை மேடாக்கி, அதில் வாழைக் கன்றுகளை நடவு செய்வது, அதன் பக்கவாட்டுப் பகுதி வழியாக தண்ணீர், இயற்கை உரங்கள் செலுத்துவதாகும். இம்முறையின் மூலம் அதிக நீர் தேங்கினாலும் வாழை பயிர் பாதிக்காது, நோய் தாக்காது.
சாகுபடியின்போது வாழைப் பயிர்களுக்கு தெளிப்பதற்காக எம்590 என்ற இயற்கை நுண்ணுயிர் உரத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மாட்டுச் சாணம், கோமிய நீர், வெல்லம், பச்சைப்பயிறு உள்ளிட்டவற்றை சரியான விகிதத்தில் கலந்து, அந்த கலவையின் மூலம் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து, உரமாக பயிருக்கு செலுத்தப்படுகிறது. இதன் மூலம் பயிரின் சத்து அதிகரிக்கும்.
அடுத்து, விவசாயிகள் வாழையை சந்தைப்படுத்த நாங்கள் உதவுகிறோம். விவசாயிகளிடம் கிலோ-வுக்கு இவ்வளவு என்ற விலையில் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இந்த விலை ஓர் ஏக்கருக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சமாகவும் அதிக பட்சம் மூன்று லட்சமாகவும் இருக்கும். இதில் விலை குறைவாக இருந்தாலும், விவசாயிகள் நிர்ணயிக்கும் தொகையை நாங்கள் அளிப்போம். அதேசமயம், விவசாயிகள் நிர்ணயிக்கும் தொகையை விட அதிக தொகைக்கு விற்பனையானால் எங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தொகை விவசாயிகள் தர வேண்டும்.
உதாரணத்துக்கு, நேந்திரன் பழம் கிலோ ரூ.20 என்ற விலையில், விவசாயிகளிடம் நாங்கள் வாங்குவோம். சந்தையில் ரூ.20-க்கு கீழ் விலை சென்றால் அதற்கான இழப்பை நாங்களே ஏற்றுக்கொள்வோம்.ஒருவேளை கிலோ ரூ.40-க்கு விற்பனையானால், கூடுதலாக கிடைக்கும் 20 ரூபாயையும் விவசாயிகளுக்கே கொடுத்துவிடுவோம். இந்த அதிக லாபத்தில் 25 சதவீதம், அதாவது 5 ரூபாய் மட்டும் எங்களுக்கு கொடுத்தால் போதும்.
வாழை நீண்ட கால பயிர். ஒரு தார் வர14 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த கால இடைவெளியில் அதிக தார்களை அறுவடை செய்ய இடைக்கன் முறையை பின்பற்றலாம். ஒரு வாழை நடவு செய்து 5 அல்லது 6 மாதங்கள் கழிந்த பின்னர் மற்றொரு இடைக் கன்றை வளர விட வேண்டும். அதன் பின்னர் ஆறு மாதம் கழித்து மற்றொரு இடைக் கன்றை வளர விட வேண்டும்.
இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாழைத்தாரை அறுவடை செய்ய நீண்ட காலம்காத்திருக்க வேண்டிய தில்லை. குறிப்பிட்ட வருடங்களில் அதிக எண்ணிக்கையில் வாழைத்தாரை அறுவடை செய்யலாம். இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய லாபத் தொகை கிடைக்கும். இது தொடர்பாக விவசாயிகளிடமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
8 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago