மரச்சிற்பங்களை செதுக்கிய கலைக்கு ஓய்வா? - வேலூர், தி.மலையில் வாழ்வாதாரத்தை இழக்கும் கலைஞர்கள்

By ந. சரவணன்

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அழிந்து வரும் மரச்சிற்பக் கலையை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சிற்பக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரத்திலும் இந்தளவுக்கு நுணுக்கமான சிற்பங்கள் செதுக்க முடியுமா ? என மக்கள் வியக்கும் அளவுக்கு வேலைப்பாடு தெரிந்த மரச்சிற்பக் கலைஞர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அதிகம் உள்ளனர். வீடு, வணிக வளாகம், வழிபாட்டு தலங்களின் அழகை மேலும் மெருகேற்றுவதில் சிற்பங்களுக்கு இணையானது எதுவுமே இல்லை எனக் கூறலாம்.

ஒரு வீடாகட்டும், வணிக வளாக மாகட்டும் அல்லது ஓர் அரங்கமாகட்டும் அதை அழகுப் படுத்துவதில் மரச் சிற்பங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக, கடவுள் போன்ற மரச்சிற் பங்களுக்கு கலைப் பிரியர்கள் மத்தியில் நல்ல வர வேற்பு உள்ளது. கரோனா பெருந்தொற்றால் அழிவை நோக்கிச்சென்ற பல தொழில்களில் மரச்சிற்பக்கலையும் பெரிய பாதிப்பை சந்திந்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் முறையில் மரச்சிற்பங்களின் தேவை அதிகரித்துள்ளதால் கைகளால் சிற்பங்களை செதுக்கி வந்த நூற்றுக் கணக்கான மரச்சிற்பக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை அடியோடு இழந்து குடும்ப வறுமையால் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் நிலை உருவாகிவிட்டது.

தலைமுறை, தலைமுறையாக செய்து வந்த மரச்சிற்பக் கலையை தவிர வேறு தொழில் செய்ய தெரியாத பல கலைஞர்கள் இன்னமும் மரச்சிற்பக் கலையே தங்களது வாழ்வாதாரமாக கருதுகின்றனர். அழிவின் விளிம்பில் உள்ள மரச்சிற்பக் கலையை தமிழ்நாடு அரசு மீட்டெடுக்க வேண்டும் என சிற்பக்கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் தமிழரசன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, ராணிப்பேட்டை, வாலாஜா போன்ற பகுதிகளில் மரச்சிற்பங்கள் செதுக்கும் தொழி லாளர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.

எங்கள் குடும்ப தொழில் மரச்சிற்பம் செதுக்குவது. மரங்களை வாங்கி அதை குறைந்தபட்சம் 10 நாட்கள் வெயிலில் காய வைத்து அதன் பிறகு, வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவங்களில் கைகளால் மரங்களை செதுக்கி அதை அழகிய சிற்பங்களாக வடிவமைத்து கொடுத்து வந்தோம். கதவில் ஒரு ஓவியத்தை செதுக்க 2 முதல் 4 நாட்கள் வரை ஆகும். அதற்கான நாங்கள் பெற்ற சம்பளம் ரூ.3 ஆயிரம். இந்த தொகையை 2 முதல் 3 பேர் பங்கிட்டு வந்தோம்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் நாங்கள் வேலை வாய்ப்பை இழந்தோம். அந்த நேரத்தில், கட்டிட ஒப்பந்தாரர்கள், தச்சுத் தொழிலாளிகள் குறைந்த செலவில் கதவு, ஜன்னல்கள் செய்ய டிஜிட்டல் முறை என்ற பெயரில் இயந்திரங்களில் (மிஷின்) சிற்பங்களை செதுக்கினர். நாங்கள் பெற்ற சம்பளத்தில் பாதி சம்பளத்தை இயந்திர உரிமையாளரிடம் வழங்கினர்.

எங்களை காட்டிலும் இயந்திரத்தில் மரச்சிற்பங்களை குறைந்த செலவில் செதுக்குவதால் கட்டிட ஒப்பந்த தாரர்களுக்கு லாபம் அதிகரித்ததால் எங்கள் தொழில் படிப்படியாக தேய்ந்து போனது. எங்களால் மட்டுமே மரச்சிற்பத்தில் நுணுக்கமான வடிவமைப்புகள் கொடுக்க முடியும். இது தெரிந்தும் பல கட்டிட ஒப்பந்ததாரர்கள் எங்களுக்கு வேலை வழங்குவதை தவிர்த்து வருவது வேதனையளிக்கிறது.

கரோனா பெருந்தொற்று குறைந்து பல தொழில்கள் தற்போது பொலிவு பெற்று வருகிறது. ஆனால், மரச்சிற்பக்கலையை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். ஆகவே, அழிந்து வரும் மரச்சிற்பக்கலையை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE