டைப் 1 நீரிழிவு நோயும் குழந்தைகளும்: அரசு செய்ய வேண்டியது என்ன?

By கண்ணன் ஜீவானந்தம்

இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்த ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையில் (INdia DIABetes [INDIAB] Study ) கூறப்பட்டுள்ளது. இந்த நீரிழிவு நோய் டயாபடிஸ் மெலிட்டஸ் டைப்-2 எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஆகும். குறிப்பாக, வளர் இளம் பருவத்தினருக்கும், அதிக வயது உடையவர்களுக்கும்தான் இந்த நோய் பாதிப்பு ஏற்படும். மறுபுறம் குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது டயாபடிஸ்மெலிட்டஸ் டைப்-1 என்று அழைக்கப்படுகிறது.

டயாபடிஸ்மெலிட்டஸ் டைப்-1: முதல் வகை நீரிழிவு நோயில் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில் உள்ள B செல்கள் மெதுவாக அழிக்கப்படுகின்றன. கருவில் அல்லது பிறந்த உடன் இந்த அழிவு ஆரம்பித்து, சுமார் 80 சதவீதம் செல்கள் அழிந்தவுடன் நோய் வெளிப்படுகிறது. மரபணுக்கள், வைரஸ், சில மருந்துகள், அதிக மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணம். டைப்-1 நீரிழிவு நோயானது 1 - 2 வயதுக்குள், 5 வயதில் மற்றும் பருவ வயதில் என்று மூன்று பிரிவுகளில் அதிகமாகக் கண்டறியப்படுகிறது. டைப்-1 நீரிழிவு நோய் மரபணு நோய் என்றும் கூறப்படுகிறது. டைப்-1 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி அல்லது மாத்திரைகள் கட்டாயம் தரப்பட வேண்டும்.

இந்தியாவில் பாதிப்பு: மத்திய சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி இந்தியாவில் 20,351 இளம் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இதில், 13,368 பேர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பார்த்தால் இளம் நீரிழிவு நோயாளிகளில் 65.6 சதவீத பேர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் சென்னையில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் 20 வயதுக்கு கீழ் உள்ள 1 லட்சம் பேரில் 5 பேருக்கு டைப்-1 நீரிழிவு நோய் (4.9 cases/1,00,000 populations) உள்ளது தெரியவந்துள்ளது. லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு ஒன்றின்படி இந்தியாவில் 8.6 லட்சம் பேர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2040-ம் ஆண்டு இரு மடங்காகும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சிறு வயது முதல் டைப்-1 நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் பற்றியும், அவர்களுக்கான சிகிச்சை முறை பற்றியும் அரிந்து கொள்ள சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் செயல்பட்டுவரும் டைப்-1 வகை நீரிழிவு நோய் சிகிச்சை மையத்தில் சுமார் பல மணி நேரம் பயணம் செய்ததன் அனுபவ பகிர்வுதான் இது:

ஓடி, ஆடி விளையாட முடியாது: எழும்பூர் குழுந்தைகள் நல மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடி கொண்டு இருந்தனர். ஆனால் நீரிழிவு நோய் சிகிச்சை பிரிவில் மட்டும் குழந்தைகள் ஓடி, ஆடும் சத்தம் கேட்கவில்லை. இது தொடர்பாக அங்கிருந்து பெற்றோர்களிடம் கேட்டபோது, அதிக நேரம் விளையாடினால் சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் குழுந்தைகளை அதிக நேரம் விளையாட விடுவது இல்லை என்று தெரிவித்தனர்.

எந்த நோய் என்பது கூட தெரியாது: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 40 பேரின் சிகிச்சை முறைகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. இந்த 40 குழந்தைகளில் 25 குழந்தைகள் சிறு வயது குழந்தைகள் ஆகும். ஆதாவது அவர்களுக்கு என்ன மாதிரியான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வயது கூட இல்லாத குழந்தைகள் ஆகும். அவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது கூட தெரியாமல் பெற்றோர்களின் அருகில் நின்று கொண்டு இருந்தார்கள் அந்தப் பிஞ்சுகள்.

அடிக்கடி ஊசி: டைப்-1 நீரிழிவு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தினசரி சீரான இடைவெளியில் இன்சுலின் செலுத்த வேண்டும். அதை ஊசி வழியாக உடலில் செலுத்தும் போது வலியால் குழந்தைகள் அதிகம் அழுவதால் pen வடிவில் உள்ள ஊசியை எப்போது கிடைக்கும் என்று பல பெற்றோர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு சில விவரம் தெரிந்த குழந்தைகளும் நேரடியாக மருத்துவர்களின் இதைக் கேட்டனர். pen வடிவிலான ஊசி மூலம் செலுத்தும் அதிக வலி இருக்காது என்பதால் பெற்றோர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

பள்ளிக்கு செல்வது: பெற்றோர்கள் பலர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போகிறோம், அங்கு எப்படி இன்சுலின் போட முடியும் என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். மேலும், பள்ளி தொடங்க உள்ளதால், பலர் சோதனை செய்து, இன்சுலின் அளவுகளில் மாற்றம் செய்வது தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றனர்.

பிஸ்கட்டுக்கு தடை: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது பிஸ்கட். ஆனால் பிஸ்கட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் அளிக்கவே கூடாது என்று அனைத்து பெற்றோர்களுக்கும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கி கொண்டே இருந்தனர். இதையும் மீறி ஒரு சில பெற்றோர்கள், குழந்தைகள் மாலை நேரங்களில் பிஸ்கட் தான் கேட்பதாக தெரிவித்தனர்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஒரு சாதாரண குழந்தைகளின் வாழ்கை முறையில் இருந்து டைப் - 1 நீரிழிவு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்கை முறை முற்றிலும் மாறுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர் கூறியதாவது:

டைப் - 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற குழந்தைகளை போல விளையாடலாம். விளையாடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஒவ்வொரு குழந்தையின் சர்க்கரை அளவுகளை பொறுத்து, இன்சுலின் அளவு அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும். ஒரே இடத்தில் அந்த இன்சுலினை செலுத்தினால் மருந்து அந்த இடத்திலேயே தேங்கி விடும். மருந்து வேலை செய்யாது. எனவே தான். ஒரே இடத்தில் ஊசி செலுத்தக் கூடாது என்று தொடர்ந்து பெற்றோர்களிடம் கூறி வருகிறோம்.

நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள் மட்டுமல்லமல்லாமல், அனைத்து குழந்தைகளுக்கும் பிஸ்கட் தர கூடாது என்பது தான் எங்களின் கருத்து. பிஸ்கட்டில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. எனவே எந்த குழந்தைக்கும் பிஸ்கட் தரக் கூடாது. பிஸ்கட்டுக்கு பதிலாக சுண்டல், பயறு வகைகளை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கம் ஏற்படுத்தலாம். இதனால் ஊட்டசத்து அதிகரிக்கும்." என்றனர்.

இது தொடர்பாக பெற்றோர்களிடம் பேசும் அவர்கள் முக்கியமாக 3 கோரிக்கைகளை முன் வைத்தனர். இதன் விவரம்:

சிறப்பு குழந்தைகளாக அறிவிக்க வேண்டும்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல் இயல்பாக இருக்க முடிவது இல்லை. தினசரி இன்சுலின் ஊசி, தினசரி 4 முறை சர்க்கரை அளவு பரிசோதனை, சீரான இடைவெளியில் ரத்த பரிசோதனை என்று பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே டைப் - 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிறப்பு குழந்தைகளாக அறிவிக்க வேண்டும். சிறப்பு குழந்தைகளாக அறிவித்து அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் வசதி: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, "எழும்பூர் மருத்துவமனையில் தான் சர்க்கரை நோய் கண்டறிவதற்கான பரிசோதனை கருவி மற்றும் உள்ளிட்ட உபகரணங்கள் தருகிறார்கள். ஆனால் மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இது போன்ற வசதிகள் இல்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் டைப் - 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்று தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும்." என்றனர்.

பள்ளிகளில் வசதி: டைப் - 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காலை, மதியம், மாலையில் இன்சுலின் செலுத்த வேண்டும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் நாங்கள் ஊசி செலுத்தி விடுவோம். ஆனால் அவர்கள் பள்ளிகளில் இன்சுலின் ஊசிகளை செலுத்துவதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. எனவே இந்த டைப் - 1 நீரிழிவு நோய் தொடர்பாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொடர்பாகவும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு பள்ளிகளில் இன்சுலின் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பு: REACH (Resource Group for Education and Advocacy for Community Health) Media Fellowship programme for Reporting on NCDs 2023 பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE