பறை இசை தமிழினத்தின் தொன்மையான அடையாளம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

கோவை: பறை இசை தமிழினத்தின் தொன்மையான அடையாளம் என, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘உலகப் பொது இசை பறை மாநாடு 2023’ நேற்று நடந்தது. பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ் வளர்ச்சித்துறையை அவர் வசமே வைத்திருந்தார். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இத்துறைக்கு தற்போது நான் அமைச்சராகி உள்ளேன். கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்கியுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறை இசை தமிழினத்தின் தொன்மையான அடையாளம். கோயில் திருவிழாக்கள் மற்றும் இறுதி ஊர்வலத்திலும் பறை இசைக் கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆண்கள் மட்டுமின்றி தற்போது பெண்களும் இக்கருவியை இசைக்க தொடங்கியுள்ளனர். அரசர்கள் காலத்தில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்திலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து மூன்றாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆறாயிரமாக இருந்த ஓய்வூதியர்கள் எண்ணிகையும் 7 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகளுக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் பகுதி நேர கிராமிய இசை கற்பிக்கும் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். நாட்டுப்புற கலைஞர் நலவாரியத்தில் தகுதியுள்ள கலைஞர்கள் இணைந்து அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக திருக்குறள் பறைப்படை என்ற தலைப்பில் 1330 என்ற வடிவில் நின்றபடி 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் பறை இசைத்தனர். முன்னதாக, மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு இசைக் கல்லூரியில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE