கோவையில் நாய், பூனைகளுக்கான மின் மயானம் திறப்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை சீரநாயக்கன்பாளையத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்மார்ட் சிட்டி சார்பில் நாய், பூனைகளுக்காக அமைக்கப்பட்ட மின் மயானத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

பின்னர் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மின் மயானம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகள் இறந்த பின்பு அதனை இங்கு கட்டணம் செலுத்தி தகனம் செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு 6 நாய்கள் வரை இங்கு எரியூட்ட முடியும்.

இறந்த விலங்குகள் எரிக்கப்பட்டு, அதன் மாசு வெளியே வராமல் பார்த்துக் கொள்வதுடன், மக்களுக்கு எந்தவித சுகாதார கேடும் ஏற்படாத வகையில் மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் செலவு, பிற செலவுகளை கணக்கிட்டு எரியூட்டுவதற்கான கட்டண தொகை அறிவிக்கப்படும்.

கோவை மாநகரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக தெருநாய்கள் உள்ளன. எங்கேனும் அவை உயிரிழந்தால் பொதுமக்கள் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தலாம். இந்த மின் மயானத்துக்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து, கோவை புறநகர் பகுதியிலும் இதேபோல மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE