குருதித் தேவையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரூரில் ரத்த வங்கி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

By Guest Author

அரூர்: உலக சுகாதார நிறுவனம், ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14-ம் தேதியை, உலக ரத்த கொடையாளர் தினமாக கொண்டாடி வருகிறது. சிறப்பு மிக்க இந்த நாளில் அரூரில் ரத்த வங்கி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் மலைப்பகுதிகளை அதிகம் கொண்டதாகவும், கல்வியறிவு குறைந்த பாமர மக்கள் மிகுந்த பகுதியாகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரிக்கு மருத்துவக் கல்லூரி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, மாவட்ட அரசு மருத்துவமனை அரூருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் காரணங்களால் பென்னாகரத்துக்கு மாவட்ட மருத்துவமனை மாற்றப்பட்டது.

மலைக் கிராமங்களான சித்தேரி, சிட்லிங், கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே சத்து குறைபாடு காரணமாக தலை முறை, தலைமுறையாக தலசீமியா நோய் இன்று வரை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரத்த அணுக்களின் வளர்ச்சி இல்லாததால் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் ரத்தம் ஏற்றுவது அவர்களுக்கு இன்றியமையாத ஒன்று.

அதேபோல் அரூர் பகுதியில் ஊட்டச் சத்தின்மை காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு பேறு காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுவதும் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றாக உள்ளது. இதுபோன்ற பாதிப்புகள், உயிரிழப்புகளை தடுக்க அரூர் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.

அரூர் பகுதியில் ரத்ததான முகாம் நடைபெற்றாலும் ரத்தம் சேகரிக்கப்பட்டு தருமபுரி ரத்த வங்கிக்கே சென்று விடுகிறது. அருா் பகுதியில் விபத்தோ அல்லது கா்ப்பிணிகளுக்கோ, வேறு அவசரத் தேவைகளுக்கோ ரத்தம் தேவைப்பட்டால் தருமபுரி சென்று ரத்தம் செலுத்தி மாற்று ரத்தம் பெற்று வர வேண்டிய சூழலே நிலவுகிறது. அதற்குள் பாதிப்பு அதிகமாகி விடுகிறது.

இது குறித்து அரூரில் 17 முறை ரத்த தானம் செய்துள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் சங்கர் மற்றும் ரத்த கொடையாளர்கள் கூறியதாவது: ரத்த தானம் என்பது ஒருவர் தனது ரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200 அல்லது 300 மில்லி. ரத்தம் வரை கொடுக்கலாம்.

அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம். இதற்கு 10 நிமிடங்களே போதும். ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை. அரூர் பகுதியில் ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் அதிக அளவில் இருந்தும், ஒவ்வொரு முறையும் தருமபுரி சென்று தானம் அளித்துவருவது சிரமமாக உள்ளது.

இதனை போக்கிட அரூரில் ரத்த வங்கி அமைத்தால் என்னைப்போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தானம் அளித்து அதன் மூலம் பல்வேறு உயிரிழப்பை தவிர்த்திட முடியும். எனவே, மக்களின் தேவைகளை புரிந்து அரூரில் உடனடியாக ரத்தவங்கி மற்றும் அதற்கான வசதிகளை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து அரசு மருத்துவமனை வட்டாரத்தில் சிலர் கூறுகையில், ரத்த தானம் வாங்குவது எளிது. ஆனால் அதற்கு தேவையான மருத்துவர்கள், ரத்தத்தை பிரிக்கும் நவீன கருவிகள், லேப்கள் போன்றவை அரசிடமிருந்து பெறுவது கடினமாக உள்ளது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE