'அயோத்தி' பட நிஜ நாயகன்: ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்ய உதவும் மதுரையின் ‘பிதாமகன்’

By என். சன்னாசி

மதுரை: “‘அயோத்தி’ என்ற திரைப்படம் உருவாக நிஜ நாயகனாக இருந்தேன். அப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி ஒருமுறை என்னிடம் பேசியபோது, நான் கூறிய தகவல்கள் பிடித்து, அவரும், அவரது படக் குழுவினர் என்னுடன் சுமார் 6 மாதம் பயணித்து படமெடுத்தனர்” என்று விவரிக்கிறார், ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்து வரும் மதுரையின் 'பிதாமகன்' நேதாஜி ஹரி கிருஷ்ணன்.

''பொதுவாக உயிருடன் இருப்பவர்களுக்கு உதவி செய்து மனக்கஷ்டம் அடைவதை காட்டிலும் யாரென்று தெரியாத இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது ஆத்ம திருப்தி கிடைக்கும்'' என்ற வார்த்தைகளை மனதில் சுமந்து சேவை புரிகிறார் மதுரை நேதாஜி ஹரி கிருஷ்ணன் (49). எப்போதும் பார்த்தாலும், மதுரை அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் சுற்றும் அவர், காவல் துறையினருடன் இணைந்து, பிரேத பரிசோதனை, உடல்களை அனுப்ப உதவிடுவார். வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு இறந்த உடல்களை கொண்டு செல்லவும், ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் உதவிடும் மதுரையின் பிதாமகன் போன்று செயல்படுகிறார்.

அவர் தனது சேவை பற்றி கூறியது: “திருச்சியைச் சொந்த ஊராக கொண்டிருந்தாலும், மனைவி ஜெயந்தி மதுரைக்காரர். 25 ஆண்டுக்கு முன்பு அரசு மருத்துவமனை ‘மார்சுவரி ’ (பிணவறை) எதிரே பெட்டிக்கடை வைத்தேன். பிறகு இறந்த உடல்களுக்கான இறுதிச் சடங்கிற்கு தேவையான பொருட்களை விற்க ஆரம்பித்தேன். விபத்து உள்ளிட்ட பிற காரணத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அழுகுரல் என்னை சேவை செய்ய தூண்டியது. ஒருசிலரால் இறுதி சடங்கிற்குரிய பொருட்கள் வாங்க பணமின்றி அவர்களுக்கு என்னால் முடிந்த சில உதவிகளை செய்தேன்.

பிரேத பரிசோதனைக்கு பின், காவல் துறை நடைமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு உடல்களை அனுப்ப உதவுதல் போன்ற செயல், தற்போது தொழிலாகவே மாறியது. தற்போது, 6 ஆம்புலன்ஸ் வாகனம் வைத்திருக்கிறேன். ஆதரவற்ற நிலையில், இறப்பவர்கள், அழுகிய நிலையில் கிடக்கும் உடல்களை காவல் துறை அழைப்பின்பேரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவேன். அடிப்படை செலவுக்கென தரும் பணத்தை வாங்கிக் கொள்வோம்.

மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பிற வேலைகளுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் விபத்து உள்ளிட்ட சில காரணத்தால் இறக்கும்போது, பெரும்பாலானோர் சொந்த ஊர்களுகே உடலை கொண்டு செல்ல விரும்புவர். விமானம் மற்றும் வாகனங்களில் உடல்களைக் கொண்டு செல்ல தேவையான எப்ஐஆர், போலீஸ் தடையில்லாத சான்று, பிரேத பரிசோதனை அறிக்கை , இறப்புக்கான காரணம், உடல் பதப்படுத்துதல், உடலை பாதுகாக்கும் பெட்டி போன்ற 7 வகையான சான்றிதழ்கள் பெற்று தருவது போன்ற நடைமுறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்.


பெரும்பாலும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரியில் வடமாநிலத்தவர்களுக்கு ராமேசுவரம், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அதிமானோர் சுற்றுலா வருவது வழக்கம். எதிர்பாராத விதமாக விபத்து மற்றும் முதியவர்கள் இறக்கும்போது, அவர்கள் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப உதவி செய்வேன். இதுவரை விமானம் மூலம் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு சுமார் 700 உடல்களும், வாகனங்கள் மூலம் 1000-க்கும் மேலான உடல்களும் அனுப்பி வைக்க உதவி உள்ளேன். ஆதரவற்ற மற்றும் இறுதி சடங்கு செய்ய முடியாத நிலையில், காவல் துறையினரின் உதவியோடு சுமார் 10,000-க்கு மேற்பட்ட உடல்களை தத்தனேரி மயானத்தில் நல்லடக்கம் செய்ய உதவி இருக்கிறேன்.

இதில், காவல் துறையினர் சிலரின் பங்களிப்பும் இருந்திருக்கிறது. மதுரையில் டீக்கடை நடத்தவேண்டும் என, நினைத்தேன். இதன்மூலம் நம்மால் முடிந்த சேவையை செய்வதால் இறந்தவர்களின் ஆத்மாக்கள் எனக்கு பலன் தருவதாக உணர்கிறேன். மனைவி ஜெயந்தி மற்றும் இரு மகளும், ஒரு மகனும் எனது சேவைக்கு ஒத்துழைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ என்ற திரைப்படம் உருவாக நிஜ நாயகனாக இருந்தேன். அப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி ஒருமுறை என்னிடம் பேசியபோது, நான் கூறிய தகவல்கள் பிடித்து, அவரும், அவரது படக் குழுவினர் என்னுடன் சுமார் 6 மாதம் பயணித்து படமெடுத்தனர்.

ராமேசுவரத்திற்கு சுற்றுலாம் வடமாநில குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழக்கிறார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதில் நேரும் சிக்கல் தான் அந்த படம் சொல்லும் கதை. இப்படம் வெளியான பிறகு வெளி நாடு நாடுகளில் இறக்கும் தமிழர்களின் உடல்கள் விமானம் மூலம் வரும்போது, அதை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கு என்னை அணுகுவது அதிகரித்துள்ளது .மன முகந்து செய்யும் இச்சேவையை எனக்கு பிறகு எனது குடும்பத்தினரும் மனிதநேயத்துடன் செய்வர்'' என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

மேலும்