சென்னை - பிராட்வே பூக்கடை பகுதி பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். சென்னையின் பரப்பரப்பு பகுதிகளுள் அதுவும் ஒன்று. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை பரப்பரப்பாக கடந்து செல்கிறார்கள். நானும் ஒரு மாலை வேளையில் அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மின் கம்பம் போல் காட்சியளித்த அந்த டிராமின் சிக்னல் என் கண்ணில் பட்டது. அதாவது, சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் சென்னையின் வீதிகளில் பயணித்துக் கொண்டிருந்த டிராம் என் கண் முன் தோன்றியது எனக் கூறலாம்... அன்றிலிருந்து டிராமை பற்றிய எனது தேடல் தொடர்ந்தது.
அந்தத் தேடலில்தான் திருபுரசுந்தரி செவ்வேள் பற்றி தெரிந்தது. அவருடனான உரையாடலில் சென்னையின் பழைய நினைவு சின்னங்களை அவர் ஆவணப்படுத்துவதை நான் தெரிந்துகொண்டேன். என்னுடைய ட்ராம் தேடல் தொடர்பான பயணத்தில் அதன் ஆதி தொடக்கத்தை அவர்தான் ஆரம்பித்துவைத்தார் என்று கூறலாம்.
தொடர்ந்து அவரிடம் பேசும்போது, “2012-ம் ஆண்டு மேற்கு அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை போன்ற இடங்களை ஆவணப்படுத்தி கொண்டிருந்தேன். அப்போது அரிய புத்தகங்கள் என்ற கடை வைத்திருக்கும் கோவிந்தராஜன் என்பவர் எங்களுக்கு பழக்கமானார். அவர் என்னுடன் சென்னை சம்பந்தப்பட்ட பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் எனக்கு அவர் இந்த டிராம் பயணச்சீட்டை கொடுத்தார். மேலும், பழைய ரயில்களின் டிக்கெட்கள் தன்னிடம் இருப்பதையும் அவர் தெரிவித்தார். இவ்வாறுதான் இந்த டிராம் டிக்கெட் என் கைகளில் வந்தடைந்தது” என்பதை பகிர்ந்து கொண்டார்.
டிராமை நினைவுப்படுத்தும் சென்னை - சென்னையின் ராயப்பேட்டையில் உள்ள இராதாகிருஷ்ணன் சாலையில் டிராம் வண்டிகாக அமைக்கப்பட்ட செட் மட்டுமே இன்றைய தலைமுறைக்கு காட்சியாக நிற்கிறது. ஒரு காலத்தில் டிராம் ஷெட்டாக இருந்த பழைய டிராம் ஸ்டேஷன் கம்பத்தை தற்போது பிராட்வே பூக்கடை காவல் நிலையம் உள்ளடக்கியிருப்பதை நம்மில் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
» கருணை என்ற பெயரில் குரங்குகளின் வாழ்க்கை முறையை மாற்றுகிறோமா?
» டாஸ்மாக் மதுவில் சயனைடு | உயர்நிலை விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்
சென்னை டிராமின் வரலாறு... - இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் சென்னையில்தான் முதல் முதலில் ஓடியது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், லண்டன் நகரில்கூட அப்போது எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடவில்லை. இங்கு அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமெரிக்காவில் ஓடியிருக்கிறது என்றால், சென்னை எத்தகைய பெருமை வாய்ந்த நகரம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய தலைமுறையில் “மதராசபட்டினம்’ போன்ற படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடிந்த டிராம் வண்டிகள், மெட்ராஸ் மாநகரில் சுமார் 67 ஆண்டுகளாக மாங்கு மாங்கென்று ஓடி இருக்கின்றன.
டிராம் டூ எலக்ட்ரிக் டிராம்... - 1877-ஆம் ஆண்டு சிறிய தண்டவாளத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையிலான டிராம் ரயில்களில் பயணிக்க சென்னை மக்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்து இந்த டிராம்களை நவீனப்படுத்த 1892-ஆம் ஆண்டு மின்சார டிராம் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக “மெட்ராஸ் டிராம் வேல்ஸ்” என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் பணிகள் நடந்து 1895-ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது.
மெட்ராஸ் மின்சார டிராம்வேஸைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் தன்னுடைய டிராம் சேவையை விரிவுபடுத்தியது. இதனால், மவுன்ட் ரோடு, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சென்ட்ரல், பாரிமுனை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என நகரின் பல்வேறு பகுதிகளில் எலக்ட்ரிக் டிராம் வண்டிகள் ஓடின. இந்தியாவில் மற்ற இடங்களில் மின்சார டிராம் வண்டிகள் ஒடத் தொடங்கிய ஆறு ஆண்டுகள் முன்பே சென்னையில் மின்சார டிராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. குதிரைகள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் வண்டி என்பது அன்றைய நாளில் புதுமை. இதனால், மக்கள் டிராமில் ஏற தயக்கம் காட்டினர். எனவே, மக்களிடம் உள்ள தயக்கத்தை குறைப்பதற்காக இலவச பயணத்தை டிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
பின்னர், ஒரு மைலுக்கு ஆறு பைசா என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று வண்டிகளை இயக்கத் தேவையான மின்சாரம், டிராம் பாதையின் நடுவில் பூமியின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், மழைக் காலத்தில் இம்முறை பாதிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே மேலே எலக்ட்ரிக் லைன்கள் அமைக்கப்பட்டு டிராம்கள் இயக்கப்பட்டன. இதற்கு நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தது. டிராம்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தாலும் ஐந்தாண்டுகளில் ‘மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி’ கடும் நஷ்டத்தை சந்தித்தது. அடுத்து நிறுவனத்தை விற்க ஏற்பாடாகியது. இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனியை தி எலக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்ஷன் கோ என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் வாங்கி நான்கு ஆண்டுகள் வரை இயக்கியது. எனினும் இந்நிறுவனத்தாலும் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
பின்னர், 1904-ல் மெட்ராஸ் எலக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இது கை மாறியது. அந்த நிறுவனமும் கொஞ்சம் தாக்குப் பிடித்து பார்த்தது. ஆனால், கடுமையான நஷ்டம் காரணமாக, அவர்களாலும் 1953-ம் ஆண்டுக்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து டிராம்களை இயக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை.
“அரசு டிராம் சேவையை கையகப்படுத்தி நிர்வகிக்க முடியாது” என்று அப்போதைய முதல்வர் ராஜாஜி அறிவித்தார். இதனால், 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். பொது மக்கள் பயணத்திலும் சிறு சிக்கல் ஏற்பட்டது. எனினும், மக்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் தங்கள் பயணத்தை மேற்கொள்ள பழக்கத் தொடங்கினர். மக்களை மணிக்கு ஏழு மைல் வேகத்தில் மெதுவாக நகர்த்தி வந்த டிராம் சேவை 1953-ஆம் ஆண்டு சென்னையில் நிரந்தரமாக மூடப்பட்டது.
இவ்வாறுதான் சென்னயிலிருந்து டிராம்கள் முழுமையாக மறைந்தன. ஆனால், டிராம் பயணித்த சுவடுகள் இன்னமும் சென்னையை அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
13 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
1 month ago