திருப்பத்தூர் | கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அதியமான் பெருவழிக் கல்வெட்டு கண்டெடுப்பு

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி.13 நூற்றாண்டைச் சேர்ந்த அதியமான் பெருவழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். க.மோகன்காந்தி, ஆங்கிலப் பேராசிரியர் மதன்குமார், கிருஷ்ணகிரி அரசு கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், காணிநிலம் முனுசாமி, நல்லாசிரியர் சுந்தரம், பேராசிரியர் கலைச்செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பத்தூர் அடுத்த கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது, அதியமான் பெருவழிக் கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.

இது குறித்து பேராசிரியர் முனைவர்.க.மோகன்காந்தி கூறும்போது, ‘‘சங்க காலத்தில் அதியமான் அரச மரபினர் தகடூரைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் அதியமான்களை பற்றி குறிப்பிடுகின்றன. அந்த காலத்தில் தருமபுரி மாவட்டம் தகடூர் என அழைக்கப்பட்டது.

திருப்பத்தூர் - தருமபுரி நெடுஞ்சாலையில் கொண்டப்பநாயக்கன்பட்டியில், அதியமான் வழி வந்த அரசர்கள் அதியமான் பெருவழிக் கல்லை அந்தகாலத்தில் அமைந்துள்ளனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் 4 வரிகள் கொண்ட வாசகம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இப்பெருவழிக்கல்லில் ‘அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 21’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

காதம் 21 என்பது எண்ணால் எழுதிப் பின்னர் 2 பெரிய வட்டக்குழிகளிட்டு பக்கத்தில் ஒரு சிறிய வட்டக்குழியையும் இட்டுள்ளனர். பெரிய வட்டக்குழிகள் ஒவ்வொன்றும் பத்தையும் சிறிய வட்டக்குழி ஒன்றையும் குறிப்பதாகும். இப்பெருவழிக்கல் உள்ள இடத்தில் இருந்து ‘நாவற் தாவளம்’ என்ற இடம் 21 காதம் தொலைவில் உள்ளது என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

பெருவழிகளில் செல்லும் வணிகர்கள், பயணிகள் இரவு நேரங்களில் தங்கவும், உடல் சோர்வை போக்கவும் அமைந்த இடம் தான் தாவளம் என்பது ஆகும். பண்டைத் தமிழகத்தில் நாவற்தாவளம், வேம்படித்தாவளம், மஞ்சப்புளி தாவளம், பட்டழையத் தாவளம், கடிகைத்தாவளம் ஆகிய தாவளங்கள் இருந்துள்ளன. இந்த தாவளங்களில் ‘நாவற்தாவளம்’ என்பது தாவளம் அதியமான்களின் ஆட்சியல் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

தமிழ்நாடு தொல்லியல் துறை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டமங்கலம், பதிகால் பள்ளம் ஆகிய ஊர்களில் 2 அதியமான் பெருவழிக்கற்களை ஏற்கனவே கண்டுடெடுத்துள்ளனர். கண்டமங்கலம் என்ற ஊரில் கண்டுப்பிடிக்கப்பட்ட பெருவழிக்கல்லில் ‘அதியமான் பெருவழி நாவற்தாவளத்துக்கு காதம் 29’ என்றும், பதிகால் பள்ளம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட பெருவழிக்கல்லில் ‘அதியமான் பெருவழி நாவற் தாவளத்துக்கு காதம் 27’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள பெருவழிக்கல்லில் ‘அதியமான் பெருவழி நாவற் தாவளத்துக்கு காதம் 21’ என குறிப்பிட்டுள்ளன. இக்கல்லானது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

அதியமான் ஆட்சிக்காலத்தில் ‘நாவற்தாவளம்’ என்பது வணிர்களும், வழிப்போக்கர்களும் தங்கி உணவு உண்ணும் இடமாக இருந்துள்ளது. அந்த காலத்தில் பெருவழியாக இருந்தவையே தற்போது நெடுஞ்சாலை (என்எச்) என்ற அழைக்கப்படுகிறது. பெருவழிகளில் இருந்த தாவளங்கள் மறைந்து தற்போது உணவகம், தங்கும் விடுதிகளாக உருவெடுத்துள்ளன. தாவளம், காதம் என்ற சொல்லாட்சிகள் மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியை மதுரைக்கு அழைத்துச்செல்லும் போது கோழ நாட்டில் இருந்து மதுரைக்கு ‘ஆறைங்காதம்’ என்று பெருக்கல் குறிப்பிடுகிறான். அதியமான் பெருவழிக் கல்வெட்டில் 21 காதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாவளம் என்ற ஊர் இன்றைக்கும் உள்ளது. இந்த ஊர் கிருஷ்ணகிரியில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் நாவற்தாவளம் இதுவாக தான் இருக்க வாய்ப்புள்ளது.

அதியமான் பெருவழிக்கல்வெட்டு கிடைத்துள்ள திருப்பத்தூர் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் இருந்து 50 கி.மீ., தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. 50 கி.மீ., தொலைவை 21ல் வகுத்தால் 2.3 கி.மீ., தொலைவு வருகிறது. அதன்படி பார்த்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி பகுதியில் வணிகம் செய்ய செல்லும் வணிகர்களுக்கு வழிகாட்டும் விதமாக இக்கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

மேலும், தாவளம் என்பது வணிகர்கள் தங்கி உணவு அருந்தி, ஓய்வெடுத்து செல்ல ஏதுவாக வணிகத்தை பெருக்க அன்ழைய அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட ஊராக கொண்டப்ப நாயக்கன்பட்டி அமைந்துள்ளது. இன்றையும் இந்த பகுதி வளமான பகுதியாக உள்ளது. தென்பெண்ணை ஆறு பாயும் ஊராகவும் உள்ளது.

இந்த ஊரைச் சுற்றிலும் சிறு, சிறு மலைகளும், தரைக்காடுகளும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் ஊராக உள்ளது. இந்த ஊரில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையமான புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றும் உள்ளது. எனவே, இந்த ஊரானது வணிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற ஊராக இருந்திருக்கிறது. இந்த ஊர் வழியாக தருமபுரி, ராயக்கோட்டை, தளி, ஒசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க முடியும் என்பதால் பெரிய வணிக சந்தையாக இந்த ஊர் விளங்கியிருக்கலாம் என இதன் மூலம் கருதப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்