நீரிழிவு நோய்: உலக அளவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த தொற்றா நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலரும் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 1980-ம் ஆண்டு 10.8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 41.4 கோடியாக அதிகரித்தது. 2000 முதல் 2019 வரையில் நீரிழிவு நோய் காரணமாக மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் நிலை: உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.5 கோடி மக்கள் pre diabetics எனப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) 2017-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான நோய் சுமை முன்முயற்சி திட்டத்தின் “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்” என்ற ஆய்வு அறிக்கையின்படி, தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் 1990-ல் 37.9 சதவீதத்திலிருந்து இருந்து 2016-ல் 61.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
5 சதவீத மரணங்கள்: 2020-ம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மொத்த மரணங்களில் 5 சதவீத மரணங்கள் நீரிழிவு நோயால் ஏற்பட்டுள்ளது என்று மத்திய சிவில் பதிவு அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இதன்படி 2020-ம் ஆண்டில் மருத்துவக் காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட 18,11,688 மரணங்களில் 91,123 மரணங்களுக்கு நீரிழிவு நோய் காரணமாக உள்ளது.
தமிழகத்தில் மரணங்கள்: 1990-ம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான மரணங்களில் 10.8 சதவீத மரணங்களுக்கு diarrhoeal diseases என்று அழைக்கப்படும் வயிற்றுப்போக்கு நோய்கள் தான் காரணமாக இருந்தது. இரண்டாவது இடத்தில் 6.9 சதவீதத்துடன் lower respiratory infection என்று அழைக்கப்படும் நோய்கள் தான் காரணமாக இருந்தது. ஆனால், 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட மரணங்களில் அதிகட்சமாக 14.3 சதவீத மரணங்களுக்கு இருதயம் தொடர்பாக நோய்கள் காரணமாக இருந்தது.
2-வது இடத்தில் 4.9 சதவீத மரணங்களுக்கு காரணமாக நீரிழிவு நோய் உள்ளது. தமிழகத்தில் 2020-ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட 2,95,539 மரணங்களில் 17,532 மரணங்கள் நீரிழிவு நோய் காரணமாக பதிவாகி உள்ளது. இதன் சதவீதம் 5.7 சதவீதம் ஆகும். இதன்படி இந்தியாவில் நீரிழிவு நோய் காரணமாக அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
10 கோடி பேர்: இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்த ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் (INdia DIABetes [INDIAB] Study ) கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் 15.3 சதவீதத்தினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் (pre diabetes) என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஆய்வின்படி தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமபுறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் pre diabetes) நோய்ப் பரவல் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. நகர்ப்புறங்களில் இது 10 முதல் 14.9 சதவீதம் வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு: ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையின்படி தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையிலும் நோய்ப் பரவல் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. இதன்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீத பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 சதவீத பேர் நீரிழிவு நோயால் (pre diabetes) பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக இளம் வயதினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 18 வயது முதல் நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நீரிழிவு நோய் உயிர்க் கொல்லி நோயாக மாறி வரும் நிலையில், இதற்கான காரணம், இதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் (DMDSC) மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF) ஆகியவற்றின் தலைவர் டாக்டர் வி.மோகனிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தோம்.
தமிழகத்தில் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்கு விகிப்பது பொது விநியோக திட்டம். தமிழகத்தில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் இருப்பதற்கு கடந்த 30 ஆண்டுகளாக பொது விநியோக திட்டத்தில் நாம் அளித்த அரிசிதான் காரணமா?
“முழுமையாக அரிசிதான் தான் காரணம் என்றும் கூற முடியாது. காரணம் இல்லை என்றும் கூற முடியாது. தமிழகத்தில் மக்கள் அரிசியை அதிகமாக சாப்பிடுகின்றனர். இதில் தவறு இல்லை. அரிசியும் நல்லதுதான். ஆனால் அதிகமாக சாப்பிடுவதுதான் பிரச்சனை. 30 ஆண்டுகளுக்கு முன்பு நாம் சாப்பிட்டது எல்லாம் கைக்குத்தல் அரிசி தான். 1970-ல் இந்தியாவில் 29 அரிசி ஆலைகள் தான் இருந்தன. தற்போது 1 லட்சம் அரிசி ஆலைகள் உள்ளன.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை அதிகம் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அரிசியை சாப்பிடுவது குளுக்கோஸ் சாப்பிடுவது போன்றது. அதை நாம் மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். அரிசியை இலவசமாக அளிக்கிறோம். தற்போது பொது விநியோக திட்டத்தில் தானியங்களை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தில் ராகி அளிக்கப்படுகிறது. இதையும் மீறி அரிசி தான் சாப்பிட வேண்டும் என்றால் குறைவாக சாப்பிட வேண்டும்.”
2023 ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரிசிக்கு பதிலாக முழுவதும் சிறு தானியங்களை சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளதா?
“நீரிழிவு நோய் பாதிப்பு வந்தவர்கள் இட்லி, தோசைக்கு பதிலாக ராகி சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். ஆனால், எல்லா சிறு தானியங்களும் சரியானது இல்லை. பாலீஷ் செய்யப்பட்ட சிறு தானியங்கள் நல்லது இல்லை. கடைகளில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்பதால் சிறு தானியங்களையும் பாலீஷ் செய்கிறார்கள். சிறு தானியங்களை பாலீஷ் செய்தால் அவை அரிசிக்கு இணையாக மாறி விடுகிறது. எனவே, சிறுதானியங்களைச் சாப்பிடும்போது பாலீஷ் செய்யாத சிறு தானியங்களை சாப்பிட வேண்டும்.”
நீரிழிவு நோய் பாதிப்பை தடுப்பதில் உடற்பயிற்சிகள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
“உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளிகளில் உடற்பயிற்சியை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது எல்லாம் நடக்க வேண்டும். அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டும். பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் எல்லாம் தற்போது கட்டிடங்களாக மாறி வருகிறது.
இவ்வாறு செய்யும்போது குழந்தைகள் விளையாடுவது குறைகிறது. ஓடுவதற்குகூட பள்ளிகளில் இடம் இல்லை. எனவே, பள்ளிகளில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடற்பயிற்சி வகுப்புகளுக்கு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைகளின் உடல் நலன் நன்றாக இருக்கும். படிப்பும், உடல் நலனும் சம அளவில் இருந்தால் நலமான மாநிலமாக தமிழகம் மாறும்.”
தமிழகத்தில் இளம் வயதில் ஏற்படும் நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்க உணவில் என்ன வகையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்?
“புரதச் சத்துகளை அதிகரிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தில் முட்டை அளிக்கப்படுகிறது. இதில் முழுவதும் புரத சத்துகள்தான் உள்ளது. பால் கொடுக்க வேண்டும். பாலில் புரதச் சத்துகள் மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. புரதச் சத்து அதிகமாக உள்ள உணவுகள் மதியம் மற்றும் காலை உணவுத் திட்டத்தில் இருக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இளம் வயது முதலே உணவில் இதுபோன்ற மாற்றங்களை செய்தால் இளம் வயதினர் அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதை குறைக்க முடியும்.”
குறிப்பு: REACH (Resource Group for Education and Advocacy for Community Health) Media Fellowship programme for Reporting on NCDs 2023 பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago