பழங்கால நாணயங்கள் முதல் செல்லப் பிராணிகள் வரை - சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை | ஒரு விசிட்

By ச.கோகுல்

பல்லாவரம்: சென்னை பல்லாவரம் சந்தை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த சந்தை 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இந்தச் சந்தைக்கு சில தனித்துவங்கள் உண்டு.

சென்னையின் புகழ்பெற்ற சந்தைகளில் ஒன்று பல்லாவரம் சந்தை. இந்தச் சந்தையில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகள் பலரும் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். சில வியாபாரிகள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பொருட்களை சேகரித்து வந்து இங்கே சந்தையில் விற்கிறார்கள். பலர் முன்பே கடைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் கூடுதல் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் இங்கு வருகிறார்கள். தற்போது கரண்ட் சவுத் சாலைக்கு இணையாக இயங்கும் சாலை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சந்தை நடைபெறுகிறது.

ஏழை மக்களின் சூப்பர் மார்க்கெட்: பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் அனைத்து விதமான பொருட்களும் மலிவான விலைக்கு கிடைப்பதால் சாமானிய மக்களுக்கு இது சூப்பர் மார்க்கெட்டாக விளங்குகிறது. இந்தச் சந்தையில் அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். வீட்டுக்கு பயன்படுத்தும் சமையல் பொருட்கள், காய்கறிகள் முதல் மின்னணு சாதன பொருட்கள் முதல் பழமையான பொருட்கள், சிலைகள் வரை இங்கு கிடைக்கின்றன.

குறிப்பாக, பழங்கால நாணயங்கள் இந்த சந்தையில் உள்ள கடைகளில் பரவலாக கிடைக்கின்றன. இந்த நாணயங்களை வாங்க கடைகளில் சூழ்ந்து இருக்கும் கூட்டத்தினரை காணும்போது, தமிழகத்தில் பலருக்கு நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

செல்லப் பிராணிகள்.. - இச்சந்தையில் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள் (நாய், பூனை) மற்றும் அனைத்து விதமான செடிகளும் இங்கு கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். வாரம்தோறும் இச்சந்தைக்கு 50 ஆயிரம் வரை மக்கள் வருகை தருகிறார்கள் என அங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்தச் சந்தையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கடை ’90 கிட்ஸ் மிட்டாய் கடை’. இக்கடையில் 90-களை நினைவுப்படுத்தும் 25-க்கும் மேற்பட்ட மிட்டாய்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்தக் கடைக்காகவே பலரும் சந்தைக்கு வருகை புரிகின்றனர். மேலும், குழந்தைகள் பலரின் தேர்வாக இந்தக் கடை உள்ளது.

பல்லாவரம் சந்தையும் நவாப்களும் - இந்தச் சந்தை முதன்முதலில் பல்லாவரத்தில் உள்ள சண்டி தெருவில் ஆடு மாடுகள் விற்கும் சந்தையாக இருந்ததாகவும், சில ஆண்டுக்கு முன்னர்தான் அது திரிசூலம் ரயில் நிலையம் அருகே உள்ள பழைய ஜிஎஸ்டி சாலைக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பலர் இங்கு வியாபாரம் செய்கின்றனர். இங்கு வாரம் தோறும் பல லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது .

இச்சந்தை ஏன் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது? - பலருக்கும் இந்தக் கேள்வி எழலாம். தமிழ்நாட்டில் ஆற்காடு நவாப் ஆட்சி இருந்தபோது வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைமுறைக்கு வந்தது. அவர்களுக்கு மதராஸிலும் (சென்னை) சில அரண்மனைகள் இருந்தன. வெள்ளிக்கிழமை நவாப்களுக்கு விருந்து அளிக்கும் தினமாக இருந்து வந்தது. இதனால், வெள்ளிக்கிழமைகளில் கால்நடைகள் மற்றும் இறைச்சியை அதிக அளவில் வாங்கினார்கள். இதன்மூலம் அந்த நாட்களில் விற்பனையையும் விற்பனையாளரின் பொருளாதாரத்தையும் திறம்பட அதிகரித்தது. அப்போதிருந்து, இந்தச் சந்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான பொருட்களை கொண்ட இந்த பல்லாவரம் சந்தை, அங்கு பார்வையிடும் அனைவருக்கும் சிறந்த வர்த்தகம் சார்ந்த அனுபவத்தை அளிக்கிறது என்றால் அது மிகையல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE