கோவையில் ஜூன் 18-ல் பறை இசை மாநாடு

By செய்திப்பிரிவு

கோவை: நிமிர்வு கலையகம், பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பறை இசை மாநாடு வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளதாக பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பறை இசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முன் முயற்சியாக, உலகப்பொது இசை பறை மாநாடு நடைபெற உள்ளது. பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க் கல்லூரியில் வரும் 18-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மாநாடு நடைபெறும். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லிசை கருவிகள் கண்காட்சியும் இடம்பெறும்.

சங்க இலக்கியங்களில் மட்டுமில்லாமல், பக்தி இலக்கியங்களிலும் உள்ள பறை இசையைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ‘இறையும், பறையும்’ என்ற நூல் மற்றும் பறை கற்பதற்கான முதல் பாட நூலான ‘பறை கற்போம்’ ஆகிய நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளன. ‘1330 திருக்குறள் பறைப்படை’ என்ற பெயரில் 1,330 பறைகள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் இசைக்கப்பட உள்ளன.

தென்மாவட்டங்கள், கிராமப்புற பகுதிகள் மற்றும் பழங்குடி மக்களிடமும் உள்ள இசைக் கருவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பறைக் கலைஞர்களை பெருமிதப்படுத்தும் வகையில் பறைக்காக பணி செய்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், அமைப்பினருக்கு கலையக விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE