காக்கை, குருவி, கால்நடைகள் எங்கள் ஜாதி - மதுரையில் வாயில்லா ஜீவன்களின் பசியை போக்கும் வயோதிக தம்பதி

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: கால்நடைகள், பறவைகளின் பசியைப் போக்குவதை தங்கள் கடமையாக கடந்த 25 ஆண்டுகளாக மதுரையைச் சேர்ந்த வயோதி தம்பதியினர் செய்து வருகின்றனர்.

மதுரை மூன்று மாவடியைச் சேர்ந்தவர் கு.சங்கர நாராயணன் (74), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெய லெட்சுமி (68). அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவரும் கடந்த 25 ஆண்டுகளாக வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கி வருகின்றனர். காகம், குருவிகளுக்கும் இரை கொடுப்பதையே இறைப் பணி எனக் கருதி தினமும் இந்தப் பணியைச் செய்து வருகின்றனர்.

இது குறித்து சங்கரநாராயணன் கூறியதாவது: மதுரை மாவட்டம் சோழவந்தான் எனது சொந்த ஊர். 1989-ல் மூன்றுமாவடிக்கு குடிபெயர்ந்தேன் அப்போதெல்லாம் இப்பகுதியில் வயல்வெளிகள், மரங்கள் அதிகம் இருக்கும். இதனால், குரங்குகள் புழக்கம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. குரங்குகளுக்கு பழங்கள் கொடுப்போம். வீடுகள் தோறும் கால்நடைகள் வளர்ப்பர். அவ்வாறு வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் மேய்ச் சலுக்குச் செல்லும் வழியில் எங்களது வீடு தேடிவரும். அவ்வாறு வரும்போது இரையாக தவிடு, புண்ணாக்கு கொடுப்போம். இதற்கு எனது மனைவி ஜெயலெட்சுமி மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

சுமார் 25 ஆண்டுகளாக இன்று வரை தொடர்ந்து கால்நடைகளுக்கு உணவளிப்பதை கடமையாகக் கொண்டுள்ளோம். எங்களது வீட்டுக்கு வரும் ஒவ்வொரு மாடுகளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைப்போம். அதாவது லெட்சுமி, திரிஜி, வெள்ளை கருப்பன், கொம்பில்லாதவன், கருப்பன், வெள்ளையன் என

பெயர் சொல்லி அழைத்தால்போதும் எங்கள் முன் வந்து நிற்கும். நாளொன்றுக்கு 20-லிருந்து 30 முறை மாடுகள் புண்ணாக்கு தண்ணீர் தேடி வரும். வாயில்லா ஜீவன்களுக்கு இரை அளிப்பதே இறைப்பணி எனக் கருதுகிறோம், என்றார்.

இது பற்றி அவரது மனைவி ஜெயலட்சுமி கூறுகையில், காலையில் வீட்டின் மாடியில் காகம், குருவிகளுக்கு இரை கொடுப்போம். மதியம், மாலை நேரங்களில் தாகம் தணிக்கப் பாத்திரங்களில் தண்ணீர் வைப்போம். சில நேரங்களில் குடிப்பதற்கு வைக்கும் தண்ணீரில் காகம், குருவிகள் குளியல் போடுவதை பார்க்கும்போதே ஆனந்தமாக இருக்கும். எனது கணவரும் அதில் ஈடுபாடு கொண்டுள்ளதால் அவர் வழியில் நானும் என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன்.

நாங்கள் வெளியூர் சென்ற நாட்களில் இரைக்காக வீட்டின் முன் வந்து மாடுகள் காத்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் சொல்வார்கள். அதைக் கேட்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு வகையில் உணவருந்தும். சில மாடுகள் தண்ணீர் மட்டும் குடிக்கும். சில மாடுகள் புண்ணாக்கு கலந்துகொடுத்தால்தான் சாப்பிடும். வீட்டிலுள்ள காய்கறிகள், வாழைத்தண்டு, வாழைக்காய்கள் என கொடுப்போம். இதில் எங்களுக்கு மன நிறைவு கிடைக்கிறது. பெங்களூருவில் உள்ள மகனும் எங்களின் இந்த சேவைக்கு அவ்வப்போது உதவி செய்வார்,என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE