ஒடிசாவில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளுக்குள் உடைந்துபோன புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் கனவுகள்!

By குமார் துரைக்கண்ணு

ஒடிசாவின் பாலசோர் - பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதி, ரயில்வே தண்டவாளத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளினுள் கேட்ப்பாரற்று சிதறிக் கிடந்தன பயணிகளின் காலணிகளும், லக்கேஜ் பைகளும், சூட்கேஸ்களும். உருக்குலைந்து கிடந்த ரயில் பெட்டிகளின் உடைபட்டுக் கிடந்த பக்கவாட்டு கதவுகளிலும், ஜன்னல்களின் துளைகளிலிருந்தும் உயிருக்குப் போராடியவர்களின் இறுதி முனகலும், கடைசி மூச்சும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பலி கொடுக்கப்பட்ட 275 மனித உயிர்களின் ரத்த வாடை அந்தப் பகுதி முழுவதும் வீசிய காற்றில் கலந்திருந்தது. விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றிலும் ரத்தம் கலந்து கிடந்த ஒவ்வொரு பொருளும், ஒரு சேதியை சுமந்து கொண்டிருக்கிறது. இந்த உடைமைகளின் சொந்தக்காரர்களில் பலர் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதுதான் அந்த துயரமான சேதி.

சுமப்பதற்கு யாருமின்றி காத்துக் கிடக்கும் பைகள்... - இந்தப் பைகள் யாருடையது எனத் தெரியவில்லை. ஆனாலும், ஒவ்வொரு பைக்குள்ளும் ஒரு புலம்பெயரும் தொழிலாளியின் குடும்பம் மூச்சுமுட்டிக் கொண்டிருக்கிறது. எங்கிருந்து தொடங்கி எந்த எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனவோ, ஆளரவமற்ற தண்டவாளத்தில் சுமப்போர் யாருமின்றி பாரங்களை இறக்கிவைத்து இப்படி காத்துக் கிடக்கின்றன. இறுக மூடிக்கிடக்கும் ஒவ்வொரு பைக்குள்ளும் ஓர் அம்மா அப்பாவும், மனைவி குழந்தைகளும், அக்கா, தம்பி தங்கைகளும், தாத்தா, பாட்டியுமென மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்குமுன் எத்தனையோ முறை இந்த பை புலம்பெயரும் தொழிலாளர்களின் தோளைப் பற்றிக்கொண்டு இதேபோன்ற தண்டவாளங்களின் மேல் பயணித்து பல நகரத்து கட்டுமானங்களில் இளைப்பறியிருந்தன. அதே நம்பிக்கையில் இப்போதும் மூடிக்கிடந்த அந்தப் பைகளும், மூச்சடக்கி காத்துக்கொண்டிருந்த குடும்பமும், பை உரிமையாளரின் வரவுக்காக காத்துக் கிடக்கின்றன.

மேல் கீழென்று எதுவுமில்லை... - ஒவ்வொருமுறை வீடு காலிசெய்யும்போது இதுபோன்ற வண்டியில்தான் வீட்டுச் சாமான்கள் அத்தனையும் ஏற்றப்படும். உயிரற்ற அந்த வீட்டுச் சாமான்களுக்கு வலிகளே தெரியாது. மடக்கினாலும், இடைவெளியின்றி செருகினாலும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கினாலும், கயிற்றையும், கம்பியைக் கொண்டு இறுக்கிக்கட்டினாலும் அவற்றுக்கு வலிப்பதே இல்லை. வாழும்போது எத்தனையோ பெருமைகளையும், அடையாளங்களையும் சுமந்து திரிந்தாலும் இதுபோன்ற விபத்துகளில் இறந்துவிட்டால் அடையாளம் காணப்படும் வரை வெறும் சடலம்தான் என்பதை உயிருடன் எஞ்சியிருக்கும் மனிதர்களுக்கு உணர்த்தும் வகையில்தான், ரயில் விபத்தில் பலியான எல்லா உடல்களும் பாகுபாடின்றி அந்த வண்டியில் அடுக்கி கிடத்தப்பட்டிருந்தன. கோரங்களின் சாட்சியாக காணக்கிடைக்கும் இதுபோன்ற புகைப்படங்கள் ஒவ்வொருமுறையும் கற்பிக்கும் பாடம் ஒன்றுதான். மனிதர்களில் மேல், கீழ் என்று எதுவுமில்லை. விபத்து நிகழ்ந்த இடத்தில் உடல் தட்டுப்படும் இடத்தையும், தூக்கிச் செல்ல வரும் வண்டியின் அளவைப் பொருத்தே வண்டியின் முன்பின் இடங்கள் தீர்மானிக்கப்படும் என்பதைத்தான் உணர்த்துகின்றன.

கவிதையும் காதலும்... - ஒடிசா விபத்து குரூரத்தைப் பார்க்க முடியாமல் மூடிக்கொள்ளப்பட்ட அத்தனை கண்களிலும் கண்ணீரைத் துளிர்க்க செய்தது காதல் கடிதங்கள் அடங்கிய இந்த நோட்டுப் புத்தகம்தான். "olpo olpo megh theke bristi shristi hoi, chotto chotto golpo theke bhalobasha shristi hoi" என்று வங்க மொழியில் எழுதப்பட்டிருந்த கவிதை அடங்கிய நோட்டுப்புத்தகமும், தண்டவாளத்தின் ரத்தச் சிதறல்களுக்கு இடையே காணக்கிடைத்தது. "சின்னசின்ன மேகங்கள் மழையை உண்டாக்கும், சின்னசின்ன கதைகள் காதலை உண்டாக்கும்" என்ற பொருள்தரும் இந்த கவிதைகள் யாருக்காக எழுதப்பட்டன? இது என்ன மொழி என்று தெரியாத பலராலும், ஆங்கிலத்தில் பெரிய பெரிய எழுத்துக்களால், கையால் வரையப்பட்ட பூவுடன் "I Love You" என்று எழுதியுள்ளதைப் பார்த்தவுடன் அந்த நோட்டுப்புத்தகத்தின் கனத்தையும், ஆழத்தையும் சொல்கிறது. இதை எழுதி பத்திரப்படுத்தி வைத்திருந்தவர், சொல்லிவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த புகைப்படத்தை பார்வையிடும் அத்தனை மனங்களும் சொல்லி அழுகிறது, காதல் அழிவதில்லை என்று. தண்டவாளமும் காதலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதை தண்டவாளத்தில் விரிந்து கிடந்த யாரோ அல்லது ஒரு புலம்பெயரும் தொழிலாளர் ஒருவரின் காதல் கதையை உணர்த்துகிறது.

இறுதி சடங்கு... - அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமான வரிசையில் அடுக்கி கிடத்தப்பட்டிருந்த சடலங்களின் முகத்தின் அருகே சென்று தன் மகனைத் தேடுகிறார் ஒரு தந்தை. அப்பாவின் இத்தகைய அன்பை உயிரோடு இருந்தவரை அந்த மகனுக்கு தெரிந்திருக்குமா என்பது தெரியவிலல்லை. தீராத அந்த தந்தையின் தேடல் நின்றபாடில்லை. தன் மகனாக இருந்துவிடுவானோ என்ற தவிப்பை அவரது முகம் வெளிப்படுத்துகிறது. அப்போது அங்கிருக்கும் ஒரு குரல் ‘யாரைத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்க, பதில் சொல்ல எத்தனிப்பதற்குள் தொண்டையை கவ்விய துக்கம் அடைத்துக் கொள்ள, வெடித்துக் கிளம்புகிறது அவரின் அழுகை. ஒருவழியாக இறந்த தனது மகனின் உடலை கண்டடைந்து, இறுதிச்சடங்கை முடித்தபிறகான அந்த தந்தையின் முகத்தில் காணப்படும் சோகமும், மிரட்சியும், பயமும் கலந்த அந்த உணர்வுக்கு என்ன பெயர் சொல்வது என்பது தெரியவில்லை.

செல்போனில் துடித்த இதயம்... - விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் எப்படி துடித்துக்கொண்டிருக்குமோ, அப்படித்தான் விபத்து நடந்த இடத்தில் கிடந்த செல்போன் ஒன்று அந்த போனுக்கு உரியவர் எடுத்து ஹலோ சொல்லிவிடமாட்டாரா என்ற நம்பிக்கையில் தண்டவாளத்தின் நிசப்தத்தை தொடர்ந்து கலைத்துக்கொண்டிருந்தது. எதிர்முனையில் இருப்பவர்களுக்கு விபத்து நடந்த செய்தி தெரிந்திருக்குமா? இல்லை, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வரும்போது ஏதாவது மறக்காமல் வாங்கிவரச் சொல்லி மனைவியோ, குழந்தையோ அழைத்துக் கொண்டிருப்பார்களோ என்று எண்ணற்ற கேள்விகளை அந்த செல்போன் அழைப்பு பலருக்கு ஏற்படுத்தியிருக்கும்.

மனதை உலுப்பி... - திறந்துகிடந்த சூட்கேஸ் ஒன்றில், சுவர்களில் பூசப்படும் சிமென்ட் கலவையை சமன்படுத்தும் மணியாஸ்கரண்டி, சில துணி மணிகள், ஒரு பெயிண்ட் பிரஷ், கட்டுமான பணிக்கான இன்னும் சில பொருட்களும் கிடந்தன. அந்தக் கரண்டியால், எந்தெந்த நகரத்தின் அடுக்குமாடி கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்டதோ, தெரியவில்லை? அந்த பெயின்ட் பிரஷ் எத்தனை சுவர்களில் வண்ணம் பூசியதோ தெரியவில்லை. ரத்தமும் சதையுமாக கிழிந்து தொங்கும் ரயில் பெட்டிக்குள் இப்படி கேட்ப்பாரற்று சிதறிக் கிடக்கின்றன. சமூக வலைதளங்கள் முழுவதும் அதிகம் காணப்படும் இந்தப் புகைப்படங்களும், காணொலிகளும் காண்போரின் மனதை உலுப்பி,கண்களை குளமாக்கி வருகின்றன.

அடையாளம் காணப்படாமல் தொடரும் சோகம்... - அதேநேரம், வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்த 275 பேரில், இதுவரை 170 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்ற செய்தியை கேட்கும்போதே புலம்பெயரும் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் நம் தேசத்தில் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை விளங்கச் செய்திருக்கிறது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் ரத்தத்துடன் சிதறிக்கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் அதிகம் பேசப்படாத புலம்பெயரும் தொழிலாளர்களின் துன்பத்தின் பாடுகளை ரத்த குவியல்களாக்கி காண்போரின் நெஞ்சங்களைக் கணக்கச் செய்திருக்கிறது.

மாநிலம் விட்டு மாநிலங்களுக்கும், உள் மாநிலங்களுக்கும் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான பதிவை, மூன்று நாட்களாக அடையாளம் காணமுடியாமல் கிடக்கும் இந்த கணத்துக்குப் பிறகாவது மத்திய,மாநில அரசுகள் கட்டாயமாக்க வேண்டும் என்பது இத்தொழிலாளர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்பதே புலம்பெயரும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பணியாற்றும் பலரது எதிர்பார்ப்பாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

12 hours ago

வாழ்வியல்

15 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்