அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்: குழந்தைகளை தேருக்கு அடியில் வைத்து விநோத வழிபாடு

By செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. தேருக்கு அடியில் தனித்தனியாக 50 குழந்தைகளை வைத்து விநோத வழிபாடு நடத்தினர்.

காரைக்குடி அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடியில் பிரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் கோயில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா மே 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் ஹம்ச, சிம்ம, ஹனுமந்த, கருட, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

சிறப்பு அலங்கா ரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருவேங்கட முடையான் சுவாமி

நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் தேரை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து மேற்குரத வீதியில் தேர் நிறுத்தப்பட்டு, நோயின்றி வாழ பெற்றோர் தங்களது குழந்தைகளை தேருக்கு அடியில் வைத்து விநோத வழிபாடு நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேருக்கு அடியில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து தேர் நான்குரத வீதிகள் வழியாகச் சென்று நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE