“இன்னும் எத்தனை முறை மன்னிப்பது?”- ராகுலின் குருநானக் கருத்தை குறிப்பிட்டு பாஜக கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “முட்டாள்தனத்தின் பெயரால் இன்னும் எத்தனை முறைதான் உங்களை நாங்கள் மன்னிப்பது? குருநானக் தாய்லாந்து சென்றார் என்று நீங்கள் எங்கே வாசித்தீர்கள்? என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி. அங்கு நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் தனது இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி பேசினார். அப்போது அவர், குருநானக் பற்றியும், பணிவாக இருப்பது பற்றிய அவரது போதனைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

அதில், "குரு நானக்ஜி உடன் ஒப்பிடுகையில் நான் ஒன்றும் அதிக தூரம் நடந்துவிடவில்லை. குருநானக், மெக்கா, சவுதி அரேபியா வரை சென்றுள்ளார். அவர் தாய்லாந்து, இலங்கைக்கும் சென்றுள்ளார் என நான் எங்கோ படித்திருக்கிறேன். எனவே, நாம் பிறப்பதற்கு முன்பே இப்படிப்பட்ட பெரியவர்கள் ஒற்றுமை யாத்திரை நடத்திவிட்டனர். இதுபோன்ற பெரியவர்களை நீங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜக சீக்கிய தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "முட்டாள்தனத்தின் பெயரால் இன்னும் எவ்வளவு முறை உங்களை நாங்கள் மன்னிக்க வேண்டும்? குருநானக் தாய்லாந்து சென்றார் என்று நீங்கள் எங்கே வாசித்தீர்கள்? மதம் குறித்து நீங்கள் பேசும்போது ஒரு விவேகமான அறிவாளியாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகையாக இருக்குமோ?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக கேள்வி: இந்த விவகாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்பி சிங் தனது ட்விட்டர் பதிவில், "வெகுஜன மக்களிடம் உண்மையான மதம் மற்றும் கடவுள் குறித்து விவரித்து, அவர்கள் மத்தியில் மனிதாபிமானத்தையும் ஆன்மிக அறிவையும் பரப்பும் உயரிய நோக்கத்துடன் நடத்தப்பட்ட குருநானக் தேவ் ஜியின் பயணத்துடன், தன்னுடைய அரசியல் ஆழமற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி ஒப்பிட்டுப் பேசியதற்கு, அமிர்தசரஸில் உள்ள சிரோமணி குருத்வார் கமிட்டி அல்லது டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வார் மேலாண்மை கமிட்டி எதிர்வினையாற்றும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை இந்த இரண்டு அமைப்பின் முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பதிலடி: இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு வலுசேர்க்கும் விதமாக அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கெரா ட்விட்டர் பதிவில், வலதுசாரி ஆதரவு இணையதளமான ஆர்கனைசரில், குருநானக் தனது மூன்றாவது யாத்திரையின்போது தாய்லாந்து சென்றார் என்று பதிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், "சகோதரர்களே, ஆர்கனைசரின் கட்டுரை நேரடியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று பக்தர்கள் கூட தங்களின் தூக்கத்தை இழக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக vs காங்கிரஸும், ராகுலின் அமெரிக்க பேச்சும்: அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி தனது பேச்சில் செங்கோல் விவகாரம் குறித்தும் விமர்சித்தார். நாட்டின் உண்மையான பிரச்சினையான வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவைகளைச் சரிசெய்ய அரசால் முடியவில்லை. எனவேதான் அவர்கள் செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். மேலும் நாடு, தனக்கு எல்லாமே தெரியும் என்று எண்ணுகின்ற ஒரு கூட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. ஒருவேளை மோடி ஜி கடவுளுடன் அமர்ந்திருந்தால் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கும் விளக்கமளிக்க கூடும் என்று விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள், ராகுல் வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE