‘ஆன்லைன் கேம்ஸ்’ மோகம் - நகை, பணத்துடன் பெங்களூரு ஓடி வந்த உ.பி. சிறுவன்

By செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: பெற்றோரின் கட்டுப்பாடின்றி ‘ஆன்லைன் கேம்ஸ்’ விளையாடுவதற்காக ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் ரூ.10 லட்சம் நகையுடன் பெங்களூரு ஓடிவந்த உ.பி. சிறுவனை போலீஸார் மீட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், ஆன்லைன் விளையாட்டுகளில் நீண்டநேரம் செலவிட்டு வந்துள்ளான். இதை விரும்பாத அவனது பெற்றோர் அவனை கண்டித்தும் தடுத்தும் வந்துள்ளனர்.

ரூ. 10 லட்சம் நகை: இதனால் வெறுப்புற்ற அச்சிறுவன் கடந்த மே 13-ம் தேதி தனது தாயாரின் லாக்கரில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான். பெற்றோரின் புகாரின் பேரில் உ.பி.போலீஸார், சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்பெங்களூருவில் மாலூர் ஒயிட்பீல்டு சாலையில் இச்சிறுவனை உ.பி. போலீஸார் கண்டுபிடித்தனர்.

வீட்டை விட்டு வந்ததற்கான காரணத்தை சிறுவனிடம் போலீஸார் கேட்டபோது, “நான் அதிகநேரம் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. கேம்ஸ் விளையாடும் நேரத்தை குறைக்க முயற்சிக்கின் றனர். இதனால் என்னால் மகிழ்ச்சி யாக இருக்க முடியவில்லை. அவர்கள் நச்சரிப்பு இல்லாமல் நீண்டநேரம் விளையாடுவதற்காக பணம் மற்றும் நகையுடன் வீட்டை விட்டு வந்தேன்” என்றான்.

உ.பி. போலீஸார் மீட்கும் வரை இச்சிறுவன் பெங்களூருவில் 2 வாரம் இருந்துள்ளான். இரவில் பெங்களூரு ரயில் நிலையத்தில் தூங்கி வந்த இச்சிறுவன் சுற்றியுள்ள கடைகளில் சாப்பிட்டு வந்துள்ளான்.

இச்சிறுவன் கொண்டு வந்த பணத்தில் பெரும் பகுதியை செலவழித்து விட்டான். என்றாலும் அவன் கொண்டு வந்த நகைகள் பத்திரமாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE