திரையரங்குகளில் தேசிய கீதம்: மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம்

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதை முறைப்படுத்துவதற்காக தேசியக் கொடி விதிகளில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘இந்தியா பல்வேறு வேற்றுமைகளை கொண்ட நாடு. மக்களிடம் ஒரே சீரான தன்மையை கொண்டுவர திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒருவர் எழுந்து நிற்கவில்லை என்றால் அவருக்கு தேசபக்தி குறைவு என்று அர்த்தம் இல்லை. பொழுதுபோக்கிற்காக மக்கள் சினிமாவுக்கு செல்கின்றனர். அடுத்த முறை விசாரணையின்போது தேசிய கீதத்துக்கு அவமரியாதை என்பதால் திரையரங்குகளில் மக்கள் டி-ஷர்ட், அரைக்கால் பேன்ட் அணிவதை தடுக்க வேண்டும் என்று அரசு விரும்பும். இதை அனுமதிக்க முடியாது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை முறைப்படுத்துவதற்காக தேசியக் கொடி விதிகளில் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தேசிய கீதம் பாடப்படுவது கட்டாயம் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் தாக்கத்துக்கு உட்படாமல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரலாம் ’’ என்று கூறினர்.

மேலும், திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ‘இசைக்கப்பட வேண்டும்’ என்ற வார்த்தையை ‘இசைக்கப்படலாம்’ என நீதிமன்றம் மாற்ற முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

திரையரங்கங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற மத்திய அரசின் நவம்பர் 30, 2016 உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திராசூட் விமர்சித்துள்ளார்.

தேசப்பற்றை ஒருவர் தங்கள் உடையில் சுமந்து செல்ல வேண்டிய தேவையில்லை என்று நீதிபதி சந்திராசூட் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில கொடுங்களூர் திரைப்பட சங்கம் மத்திய அரசின் தேசிய கீத உத்தரவைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றத்தில் செய்திருந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.

“அடுத்ததாக, மக்கள் திரையரங்குகளுக்கு டி-சர்ட்கள் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து செல்லக் கூடாது இது தேசிய கீதத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் என்ற உத்தரவு.. நாம் எங்கு இந்த ஒழுக்கவாத கட்டுப்பாட்டை, கண்காணிப்பை நிறுத்தப் போகிறோம்” என்றார் நீதிபதி சந்திராசூட்.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தேசிய மதிப்பீடுகளைக் காக்க வேண்டும், தேசியக் கொடி, தேசிய கீதம் மதிக்கப்பட வேண்டும், என்று அரசியல் சாசனம் பிரிவு 51-ஏ-யை எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த நீதிபதி சந்திராசூட், 51-ஏ சட்டப்பிரிவு மிகவும் பரந்துபட்டது, இதில் அடிப்படை கடமைகளாக குடிமக்கள் விஞ்ஞான உணர்வு, மனிதநேயம், எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாத விசாரம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவையனைத்தையும் நாங்கள்தான் வலியுறுத்த வேண்டுமா? ஒரு அரசாக உங்களிடம்தான் அதிகாரம் உள்ளது, இது உங்கள் விவகாரம், நாங்கள் ஏன் உங்கள் சுமையைச் சுமக்க வேண்டும்?” என்றார்.

வழக்கறிஞர்களில் ஒருவர் எழுந்து, சில மிஷனரி பள்ளிகள் தேசிய கீதத்தை இசைக்க மறுப்பதாக தெரிவித்த போது, நீதிபதி சந்திராசூட், “நான் மிஷனரி பள்ளியில்தான் படித்தேன், நாங்கள் தேசிய கீதத்தையும் பாடினோம், ‘எங்கள் தந்தை’ என்பதையும் பாடினோம். எங்களுக்கு இரண்டுமே முக்கியம்தான்” என்றார்.

கடைசியில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதை முறைப்படுத்துவதற்காக தேசியக் கொடி விதிகளில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்