கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சமுதாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

By செய்திப்பிரிவு

இம்பால் / டெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பல்வேறு சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். கலவரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகிபழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 3-ம் தேதி இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. இதில் சுமார் 80 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர்.

கலவரம் பாதித்த இடங்களில் ராணுவமும், அசாம் ரைபிள்ஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், அங்கு மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன்முறை தொடர்பாக கடந்த வாரத்தில் சுமார் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து தலைநகர் இம்பாலுக்கு வந்தார்.

அவர் நேற்று காலை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா, மத்திய உளவுத் துறை இயக்குநர் தபன் குமார் டேகா, மாநில தலைமைச் செயலர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரத்தை அமித் ஷா ஆய்வு செய்தார். பின்னர், பல்வேறு சமுதாய அமைப்புகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து அமித் ஷா கூறும்போது, “பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர். மகளிர் அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்தேன். மணிப்பூர் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றாக உறுதிபூண்டுள்ளோம். இங்கு விரைவில் அமைதி திரும்பும்” என்றார்.

பிறகு, வன்முறையால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்தில் அமித் ஷா பயணம் மேற்கொண்டார். அங்கு பழங்குடியின பெண்கள் தேசியக் கொடிகளை ஏந்தி அவரை வரவேற்றனர். அங்கும் உள்ளூர் பிரமுகர்களை சந்தித்து பேசினார். மணிப்பூர் அரசியல் தலைவர்களுடனும் அவர்நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

தீவிரவாதம் அல்ல: மணிப்பூர் நிலவரம் குறித்து முப்படை தலைமை தளபதி அனில்சவுகான் கூறும்போது, “மணிப்பூரில் தற்போதுள்ள சூழல் தீவிரவாதம் தொடர்புடையது அல்ல. அது, இரண்டு இனக் குழுக்களுக்கு இடையிலான மோதல் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. இப்பிரச்சினையில் மாநில அரசுக்கு நாங்கள் உதவுகிறோம். அங்கு பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்படும் என நம்புகிறேன்” என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர்கள் இபோபி சிங், முகுல் வாஸ்னிக், முன்னாள் மணிப்பூர் துணை முதல்வர் கைகாங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் மேகசந்திர சிங், மணிப்பூர் காங்கிரஸ் பொறுப்பாளர் பக்த சரண் தாஸ் உள்ளிட்டோர் நேற்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். அப்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பாக அவரிடம் மனு கொடுத்தனர்.

வன்முறையால் மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். குடியரசுத் தலைவர் இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்நிலை விசாரணைகுழு அமைப்பது உட்பட 12 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE