பெங்களூரு: கர்நாடக தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த இலவச திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அம்மாநில முதல்வர் சித்தராமையா திணறி வருகிறார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்தது. அதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். மகளிருக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் அனுமதிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம், மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் ஆகிய 5 உத்தரவாத வாக்குறுதிகளை அறிவித்தது.
இதுகுறித்த விவரங்கள் அச்சடிக்கப்பட்ட உத்தரவாத அட்டை வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டன. அப்போது இந்த வாக்குறுதிகள் முதல்அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் முதல்வராக சித்தராமையா 20-ம் தேதி பதவியேற்றார். அந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “இன்னும் சில மணி நேரங்களில் நாங்கள் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போகிறோம். சித்தராமையா நேரடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று இலவச திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடுவார்” என்றார்.
உடனே தலைமைச் செயலகத்துக்கு சென்ற சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 8 மூத்த அமைச்சர்கள் ஆகியோருடன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து 5 வாக்குறுதிகளையும் கொள்கை அளவில் நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இது தொடர்பாக தனித்தனி அரசாணைகளையும் அவர் வெளியிட்டார்.
ஆனால் அந்த இலவச திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அமைச்சரவை விரிவாக்கத்துக்குப்பின் அந்த திட்டங்கள் அமல்படுத்தப்படும் என சித்தராமையா தெரிவித்தார். 28-ம்தேதி அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்ற பின்னரும், இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
போர்க்கொடி தூக்கிய மக்கள்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 10 நாட்கள் ஆன பின்னரும் 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் டிக்கெட் எடுக்க மறுப்பதால் நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இதேபோல பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட இடங்களில் மக்கள் 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகே முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்துவோம் என தெரிவித்துள்ளனர். இதனால் மின் துறை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ரூ.62 ஆயிரம் கோடி: இந்நிலையில் முதல்வர் சித்தராமையா இலவச திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், மூத்த அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அதிகாரிகள் தரப்பில், “5 உத்தரவாத வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ரூ.62 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதை நிறைவேற்ற கர்நாடக அரசின் தற்போதைய ஆண்டு பட்ஜெட்டில் 20% நிதியை ஒதுக்க வேண்டும்.
2022-23 பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரத்து 581 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் இலவச திட்டங்களை உடனடியாக நிறைவேற்றினால் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் கடந்த ஆண்டு வரி விதிப்பின் மூலம் ரூ.83 ஆயிரத்து 10 கோடி வருமானமாக வந்துள்ளது. எனவே, வரி விதிப்பை அதிகரிப்பதன் மூலம் இந்த நிதிச் சுமையில் இருந்து தப்பிக்கவும் முடியும்” என ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.
பாஜக நெருக்கடி: இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல், “காங்கிரஸ் அளித்த இலவச திட்டங்களை நம்பியே மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் அதை நிறைவேற்றாமல் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் 5 திட்டங்களையும் செயல்படுத்தாவிட்டால் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.
மோடி கொடுத்தாரா?: இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், “நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அந்தந்த துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். எனவே பாஜகவினர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.
மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். அவ்வாறு பணத்தை டெபாசிட் செய்தாரா? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். அதனை மோடி செய்தாரா? விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக மாற்றுவதாக கூறினார். அதை செய்தாரா? நாங்கள் இதையெல்லாம் கேட்டால் பாஜகவினர் மவுனமாகி விடுகிறார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago