25 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள் - பிரசாந்த் கிஷோருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை

By என். மகேஷ்குமார்

அமராவதி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இதில் வரும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்கட்சியின் 25 எம்எல்ஏக்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றார். இக்கூட்டம் முடிந்த பிறகு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை அவர் சந்தித்து, ஆந்திர அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டம் அமராவதியில் நடைபெற இருந்தது. ஆனால், முன்கூட்டியே ஜெகன் டெல்லி சென்றதால், அங்கு இந்த சந்திப்பு நடைபெற்றது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழு, ஜெகனுக்காக பணியாற்றி வருகிறது. தற்போது இக்குழுவினர் ஆந்திராவில் 175 தொகுதிகளிலும் தேர்தலுக்கு முந்தைய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதாகவும் இதில் ஆளும் கட்சியின் 25 எம்எல்ஏக்களின் பணி திருப்திகரமாக இல்லை என்று அறிக்கை வழங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் வரும் 2024 தேர்தலில் இவர்கள் 25 பேருக்கும் ‘சீட்’ கிடையாது என்பது திட்டவட்டமாகி உள்ளது.

மேலும், ஆந்திராவில் தற்போதுள்ள ‘நவரத்தின’ திட்டத்துடன் மக்களை சந்திக்கலாம் எனவும் புதிய திட்டங்கள் தேவையில்லை எனவும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரசாந்த் கிஷோர் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE