டெல்லியில் கோப்புகள் திருட்டா? - அரசு குடியிருப்பு, மதுபான வரி ஊழலை மறைப்பதாக சிசிடிவி பதிவுகளுடன் பாஜக புகார்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசு குடியிருப்பு, மதுபான வரி விலக்குகள் மீதான கோப்புகள் திருடப்பட்டிருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. அதுதொடர்பான ஆதாரங்கள் என சிசிடிவி காட்சிப் பதிவுகளை டெல்லி பாஜக வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது இரண்டு முக்கிய ஊழல் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், மதுபான வரிவிலக்கு ஊழலில் சிக்கிய துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதாகி திஹார் சிறையில் உள்ளார்.இதையடுத்து, தனது அரசு குடியிருப்பை புதுப்பிப்பதில் பல கோடி ஊழல் செய்திருப்பதாக முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நெருக்கடி உருவாகி வருகிறது. இதை பாஜகவுடன் காங்கிரஸும் எழுப்பிவரும் சூழலில், அதுதொடர்பான முக்கிய கோப்புகள் திருடப்பட்டிருப்பதாகப் புகார் கிளம்பியுள்ளது.

டெல்லியின் தலைமை செயலகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரியான ஒய்.வி.வி.ஜே.ராஜசேகரின் அரசு அலுவலகம் உள்ளது. இதிலுள்ள அவரது அறையில் முக்கிய கோப்புகள் இருந்துள்ளன. இவர் மீது புகார் வந்ததாகக்கூறி ஆம் ஆத்மி அரசு கடந்த மே 15ல் ராஜசேகரை அந்த பொறுப்புகளில் இருந்து விலக்கியது. நான்கு தினங்களுக்கு முன் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அவருக்கு அனைத்து பொறுப்புகளையும் அளித்திருந்தார். இந்நிலையில், அதிகாரி ராஜசேகர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்ட சமயத்தில் அவரது அறையிலிருந்து கோப்புகள் திருடப்பட்டதாக டெல்லி பாஜகவினர் புகார் கூறியுள்ளனர்.

இதற்கு ஆதாரமாக அவர்கள் மே 16-ம் தேதியின் ஒரு சிசிடிவி காட்சியையும் வெளியிட்டுள்ளனர். இதில், நள்ளிரவு 2 மணிக்கு அதிகாரி ராஜசேகரின் அறையினுள் 3 பேர் புகுந்து கோப்புகளுடன் வெளியேறுகின்றனர்.இது குறித்து டெல்லி சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரான ராம் சிங் பிதூரி கூறும்போது, ‘மாலை 6 மணிக்கு பிறகு தலைமை செயலகத்தில் நுழையத் தடை இருக்கும்போது அந்த 3 பேர் உள்ளே சென்றது எப்படி? இவர்கள் அனைத்து ஊழல் கோப்புகளையும் திருடியுள்ளனர்.

இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் கேஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மீது பாஜக டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லி அரசு அதிகாரிகள் மீது மத்திய அரசு இட்ட அவசர சட்டத்தை எதிர்க்க முதல்வர் கேஜ்ரிவாலின் எதிர்கட்சிகளுடனான சந்திப்பு தொடர்கிறது. இதற்காக அவர் வெள்ளிக்கிழமை தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆதரவு பெற்றுள்ளார்.

சனிக்கிழமை தெலங்கானா முதல்வரும் பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவையும் சந்திக்கிறார். அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்தச் சந்திப்பிற்கு முன்பாக அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குடும்பத்தினர் மற்றும் சோனியா காந்தி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா வலியுறுத்தி உள்ளார். ஏனெனில், இதற்கு முன் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கூட்டிய கூட்டங்களின் அழைப்பை முதல்வர் கேஜ்ரிவால் நிராகரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE