சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்

By Guest Author

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முழக்கத்தை உருவாக்கியிருக்கிறார். ஹிந்தியில் ‘ஜித்னி அபாடி உத்னா ஹக்' அதாவது ‘மக்கள் தொகைக்கேற்ப உரிமைகள்’ என்பதே அந்த கொள்கை முழக்கம்.

இந்தியாவில் சுமார் 70% இந்தியர்கள் (ஓபிசி/எஸ்சி/எஸ்டி) ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் தோராயமாக 70% ஆக இருக்க வேண்டும். இந்த கொள்கையையே ராகுல் காந்தி வலியுறுத்துகிறார்.

அவரது கொள்கையின்படி பொதுத்துறை வங்கிகளில் உள்ள 11,310 மூத்த அதிகாரிகளில் 8,000 பேர் (ஓபிசி/எஸ்சி/எஸ்டி) ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உண்மையில் அந்த பிரிவை சேர்ந்த 3,000 பேர்தான் மூத்த அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். மத்திய அரசில் 225 இணைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் 68 பேர் மட்டுமே இணைச் செயலாளர், செயலாளர் பதவிகளில் உள்ளனர்.

மறுபுறம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வியர்வை சிந்தி உழைக்கும் 15.4 கோடி தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் ஓபிசி/எஸ்டி/எஸ்சி பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஒட்டுமொத்த துப்புரவு தொழிலாளர்களில் 100 சதவீதம் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். அரசு துறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களில் 75% பேர், ஒடுக்கப்பட்ட சாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அனைத்து ‘தகுதி’களும் சாதியின் அடிப்படையில் 30 சதவீத மக்களிடம் மட்டுமே குவிந்துள்ளன. ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த 70 சதவீத பேரிடம் அந்த தகுதிகள் எதுவும் இல்லை என்று வாதிடுவது நகைப்புக்கு உரியது.

தொழில் வெற்றிக்கான படிக்கல் கல்வி என்றால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்த வெற்றிக்கான படிக்கல்லை எளிதில் அணுக முடிவதில்லை என்பதே உண்மை.

எதிர்காலத் தலைவர்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் உருவாக்கும் புகழ்பெற்ற தனியார் நிறுவனமான அசோகா பல்கலைக்கழகத்துக்கு நிதியளிக்கும் 175 நன்கொடையாளர்களும் உயர் சாதி பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இளங்கலை மாணவர்களில் 6 சதவீதம் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஐஐடி-கள் போன்ற அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

முன்னணி ஆங்கில நாளிதழ்கள் மற்றும் ஆங்கில மின்னணு ஊடகங்களில் கடந்த 4 மாதங்களில் கட்டுரைகளை எழுதிய 600 ஆசிரியர்களில் 96 சதவீதம் பேர் உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். சுமார் 96 சதவீத செல்வாக்குமிக்க பேச்சுகள் உயர்சாதி ஆசிரியர்களால் வடிவமைக்கப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்களின் துன்பங்களைப் பற்றி பேசுவது இல்லை.

ஒடுக்கப்பட்ட சாதி சார்ந்த குடும்பத்தில் பிறந்த குழந்தை, உயர் சாதி குடும்பத்தில் பிறந்த குழந்தையைவிட வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு. இந்தியாவில் சாதிய பிளவால் ஏற்பட்டிருக்கும் சமசீரற்ற தன்மையை சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

தீர்வுகள் என்ன?

புதிய சமூக நீதிப் பணியைத் தொடங்குவதற்கான முதல்படி பிரச்சினையின் அளவைப் புரிந்து கொள்வது ஆகும். அதனால்தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் மட்டுமே, மக்கள்தொகையில் சாதிவாரியான மக்களின் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவினர்களின் சமூக நகர்வு பற்றிய சரியான விவரங்களைப் பெற முடியும். இந்த கணக்கெடுப்பு புதிய சமூக நீதித் திட்டத்துக்கு அடித்தளமாக அமைய முடியும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, அதிக இட ஒதுக்கீடு அல்லது ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்காக உடனடியாக அழைப்பு விடுப்பது முதிர்ச்சியற்ற தன்மையாகும். பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஈடுசெய்ய, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட தீர்வுகளை பரிசோதித்துள்ளன. இதுகுறித்து இந்தியாவிலும் பொது வெளியில் விவாதிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

21-ம் நூற்றாண்டில், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு நம்பத்தகுந்த தீர்வுகளாக இடஒதுக்கீடுகள் மற்றும் நேர்மறை செயல்பாடுகள் ஆகியவற்றின் கட்டமைப்புக்குள் நம்மை அடைத்துக்கொள்வது மிக குறுகிய பார்வை ஆகும். முதல் கட்டமாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் பிரச்சினையின் தீவிரம் பற்றிய விரிவான தரவுகள் மற்றும் தகவல்களைப் பெற வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்புத் தகவலைப் பகிரங்கப்படுத்தாமல் இருப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அரசு தயக்கம் காட்டுவது புரிந்துகொள்ளக்கூடியதே. தகவல்களை மறைப்பதால் பிரச்சினை மறைந்துவிடாது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ப நுணுக்கமான தீர்வைக் காண்பதற்கு தேவையான வலிமை கொண்டது நமது தேசம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE