அமராவதி: வரும் 28-ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆனால், குடியரசுத் தலைவர் இல்லாமல் பிரதமர் எப்படி கட்டிடத்தை திறந்து வைக்கலாம் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
நாடாளுமன்றத்தில் சில புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட போது, அப்போதைய பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்டிடங்களை திறந்து வைத்துள்ளனர் என பாஜக சார்பில் கூறப்படுகிறது.
எனினும் மத்திய அரசின் முடிவை ஏற்காத 19 கட்சிகள், நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுடைமை ஆக்கும் விழாவை, நாமே புறக்கணிப்பது உண்மையான ஜனநாயகம் ஆகாது.
அரசியல் காழ்ப்புணர்வுகளை சற்று தள்ளி வைத்து விட்டு, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘நாடாளுமன்ற திறப்பு விழாவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனகமேடல ரவீந்திர குமார் கலந்து கொள்வார்’’ என்று தெரிவித்துள்ளார்.