ஜம்மு காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடத்தி வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டம், ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கியது. இன்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கிஷன் ரெட்டி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. தனது மக்கள் பலனடைய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை மத்திய அரசு செய்யும்.

ஜம்மு காஷ்மீர் குறித்து பேசுவதற்கு பாகிஸ்தான் யார்? அந்த நாட்டிற்கு என்ன அதிகாரம் உள்ளது? நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ஜம்மு காஷ்மீர் ஓர் அங்கமாக உள்ளது. இது எங்கள் நிலம்; இவர்கள் எங்கள் மக்கள். இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் குறித்து பேசுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் தன் நாட்டு மக்கள் குறித்து கவலைப்பட வேண்டும். உங்கள் மக்களுக்கு நீங்கள் வேலைவாய்ப்பை அளியுங்கள்; உணவை அளியுங்கள். பாகிஸ்தானில் மக்கள் உணவின்றி உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு அரசியோ, எரிவாயுவோ கிடைப்பதில்லை. அது குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் என்ன கூறுகிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. பாகிஸ்தான் முடிந்து போன ஒன்று. நாங்கள் பாகிஸ்தானை நினைக்க மாட்டோம்.

ஜி20 கூட்டங்களை நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 56 நகரங்களில் மொத்தம் 250 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. சுற்றுலாவில் உலகின் முதல் நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம். எனவே, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா குறித்த ஜி20 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படியே, ஸ்ரீநகரில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் சுற்றுலா மாநாடுகள் நடைபெறும். ஜம்மு காஷ்மிரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்கு கடந்த நிதி ஆண்டில் 7 சதவீதமாக இருந்தது. இதனை நடப்பு நிதி ஆண்டில் 15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் முதல் சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாது, உலகின் முதல் சுற்றுலாத் தலமாகவும் ஸ்ரீநகரை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு இங்குள்ள எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, அமைதியாகவாவது இருங்கள். பிரச்சினை செய்யாதீர்கள். ஆனால், ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்சிகள், மாநிலத்தின் வளர்ச்சியை விரும்பவில்லை. இங்கே சட்டம் - ஒழுங்கு இருக்கக்கூடாது என அவர்கள் விரும்புகிறார்கள்.

பயங்கரவாதம், போராட்டங்கள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவை தொடர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அமைதியை விரும்பவில்லை. ஆனால், ஜம்மு காஷ்மீரில் அமைதியும் சட்டம் ஒழுங்கும் இருப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்பின்மையை 100 சதவீதம் வெளிப்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் கிஷன் ரெட்டி இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE