நீடித்த வளர்ச்சியைப் பெற ஜி-20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும்: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: நீடித்த நிலையான வளர்ச்சியைப் பெற ஜி-20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி-20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் மனோஜ் சின்ஹா, "அறிவின் மையமாக, ஞானத்தின் மையாக எப்போதும் இருக்கும் நிலப்பகுதி ஜம்மு காஷ்மீர். அண்டை நாட்டின் மூலம் ஊக்குவிக்கப்பட்ட பயங்கரவாதத்தால் இந்த மாநிலம் கடந்த 30 ஆண்டுகளாக அமைதியை இழந்து தவித்தது.

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மாநிலம் முன்னேறி உள்ளது. வளர்ச்சிக்கான பாதையில் ஜம்மு காஷ்மீர் அடி எடுத்து வைத்துள்ளது. வளர்ச்சி, அமைதி, முன்னேற்றம் இவையே ஜம்மு காஷ்மீரின் தாரக மந்திரம். இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக தற்போது ஜம்மு காஷ்மீர் முன்னேறி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "கைவினைப் பொருட்களை அதிக அளவில் கொண்டுள்ள மாநிலம் ஜம்மு காஷ்மீர். உலகின் உயரமான ரயில்வே பாலம் இங்குதான் உள்ளது. பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகிய விவகாரங்களில் சர்வதேச பங்களிப்பை வழங்க இந்தியா தயாராக உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் திறமையானவர்கள். மத்திய அரசு வழங்கி வரும் பல்வேறு வாய்ப்புகள் குறித்து அறிந்தவர்கள் அவர்கள். பிரதமர் மோடி தலைமையிலான உலகின் முன்னேற்றப் பயணத்தில் தானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீநகரில் உள்ள சாமானிய இளைஞரும் கருதுகிறார்" என குறிப்பிட்டார்.

"நீடித்த நிலையான வளர்ச்சியை உலக மக்களும் நாம் வாழும் கோளும் பெற வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஜி20 நாடுகளுடன் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியாவின் சுற்றுலாத்துறை உறுதி பூண்டிருக்கிறது" என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE