‘மத்திய அமைச்சர்கள் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும்’ - காங்கிரஸ் எம்.பி. அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கவனமாக படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பது குறித்த காங்கிரஸ் கேள்விக்கு பாஜக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பதிலுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 28) அன்று பிரதமர் திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிடத்தை ஏன் பிரதமர் திறந்து வைக்கிறார்? குடியரசுத்தலைவர் ஏன் திறந்து வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரஸின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பதிவொன்றில்,"ஒன்றுமே இல்லாத விஷயங்களை பிரச்சினையாக்குவது காங்கிரஸின் பழக்கம். குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராக இருக்கும் நிலையில், பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறார். அரசாங்கத்தின் சார்பாக நாடாளுமன்றத்தை வழிநடத்துகிறார். அராசங்கத்தின் கொள்கைகள் அங்கு சட்டமாக்கப்படுகின்றன. குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினர் கிடையாது. ஆனால் பிரதமர் இருஅவைகளிலும் உறுப்பினராக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த ட்வீட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ட்விட்டர் பதிவு வழியாக பதிலளித்துள்ளார். அதில் இந்திய அரசியலமைப்பு பிரிவு 79 மேற்கோள்காட்டி அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஒன்றியத்திற்கு நாடாளுமன்றம் கட்டாயம் இருக்க வேண்டும், அது குடியரசுத்தலைவரையும், இரண்டு அவைகளையும் கொண்டிருக்க வேண்டும். அவை முறையே மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று அறியப்படும். மத்திய அமைச்சர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை கவனமாக படியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பும் சர்ச்சையும்:

64,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.970 கோடி செலவில், நான்கு மாடிகள் கொண்ட முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். அன்று சாவர்காரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைக்காமல், பிரதமர் திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

> காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல்காந்தி “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

> காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடி அரசு தொடர்ந்து அரசியல் சாசன உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலுவலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் ஒன்றாக இந்த பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் "தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது.

இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும் என்று தெரிவித்துள்ளார்.

> கார்கேவின் பதிவை டேக் செய்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறுகையில்,"கார்கே சொல்வது சரியே. அரசியல் சாசன பிரிவு 60 மற்றும் 111 குடியரசுத் தலைவரே நாடாளுமன்றத்தின் தலைவர் என்பதை தெளிவாக விளக்குகிறது. புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கிய போதே அதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டிது வினோதமாக இருந்தது. இது (அரசியலமைப்பிற்கு விரோதமானது) அவருக்கு புரியாது நாடாளுமன்றத்தை குடியரசுத்தலைவர்தான் திறந்து வைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

> இதற்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, குடியரசுத் தலைவர் மாநிலங்களை மற்றும் மக்களவையின் உறுப்பினர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

>சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்பி பிரியங்கா சதூர்வேதி கூறுகையில்,"குடியரசுத் தலைவரே நாடாளுமன்றத்தின் தலைவர், அது அரசாங்கத்தை விட மேலானது அதாவது பிரதமர் பதவி. மரபுப்படி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பாஜக அதிகாரம் கையிலிருப்பாதல் கண்முடித்தமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE