ம.பி.யில் மூத்த குடிமக்களுக்கு நிதியுதவி: புனித யாத்திரைக்கான விமானப் பயணம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆளும் பாஜக அரசு பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குடிமக்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மூத்த குடிமக்கள் விமானம் மூலம் புனித யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் "முக்யமந்திரி தீர்த்-தர்சன் யோஜனா" திட்டத்தை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று காலை போஜ் விமான நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் பயன்பெற முதல்கட்டமாக 32 மூத்த குடிமக்கள் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவில் 24 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூத்த குடிமக்களுக்கான முதல்கட்ட விமான புனித யாத்திரை திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஜூலை வரையில் பல்வேறு குழுக்கள் மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களிலிருந்து பயணம் செய்ய உள்ளன.

இதுகுறித்து பயனாளிகளில் ஒருவரான 72 வயதான ராம் சிங் குஷ்வாஹா கூறுகையில். “தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருரின் கனவாக உள்ளது. அந்த கனவு தற்போது நிறைவேறுகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE