கர்நாடக முதல்வராக‌ சித்தராமையா பதவியேற்பு - டி.கே.சிவகுமார் துணை முதல்வரானார்

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விழாவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும், ஜி.பரமேஷ்வரா, கே.எச்.முனியப்பா உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக ந‌டந்தது. இதில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை பிடித்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. 38 ஆண்டுகளுக்கு பிறகு, 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.

காங்கிரஸ் மேலிடம் முடிவு: இதற்கிடையே, முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் இடையே போட்டி ஏற்பட்டது. 4 நாட்கள் நடந்த தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இதையடுத்து, இருவரும் டெல்லி சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஒரு லட்சம் பேர் பங்கேற்பு: இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஸ்ரீகண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று பதவியேற்பு விழா வெகு உற்சாகமாக நடைபெற்றது. இதில் கர்நாடகா முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட‌ போலீஸார் 5 கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், கன்னட நடிகர்கள் சிவராஜ் குமார், துனியா விஜய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கடவுளின் பெயரில், முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவி ஏற்றுகொண்ட பிறகு, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரிடம் சித்தராமையா வாழ்த்து பெற்றார். விழாவில் பங்கேற்ற அவரது மகன் யதீந்திரா, பேரன் ராகேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் மிகவும் நெகிழ்ச்சியான நிலையில் காணப்பட்டனர்.

இதையடுத்து, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தனது குரு அஜ்ஜய்யா பெயரில் பதவியேற்றுக் கொண்டார். பிறகு, ஜி.பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே, சதீஷ் ஜார் கிஹோளி, ஜமீர் அகமது கான் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து அன்னப்பறவை ஓவியத்தை நினைவுப் பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்