9 ஆண்டு கால மோடி ஆட்சி: மே 30 தொடங்கி ஒரு மாதம் கொண்டாட பாஜக முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வரும் மே 30 ஆம் தேதியுடன் 9 வருடங்கள் முடிவடைகின்றன. இதில் அரசியல் ஆதாயம் தேட, ஜூன் 30 வரை ஒரு மாத காலம் கொண்டாட்டங்களை முன்னெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் பாஜக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. இதன் பலனாக 2014 இல் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி அப்பதவியை மே 24, 2014-ல் ஏற்றார்.

தொடர்ந்து இரண்டாம் முறையும் 2019-ல் கிடைத்த தனிப் பெரும்பான்மையால், அந்த வருடம் மே 30-ல் பிரதமர் பதவியில் மீண்டும் தொடர்ந்தார். அவர் பிரதமர் பதவியை ஏற்று வரும் மே 30 ஆம் தேதியுடன் 9 ஆண்டு நிறைவு, பெறுகிறது. இதை ஜூன் 30 வரை மாபெரும் விழாவாக பாஜக கொண்டாட முடிவு செய்துள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டிற்கானக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், 2024-ல் மக்களவை தேர்தலும் வர உள்ளது. இச்சூழலில் இரண்டிலும் பிரதமர் புகழைப் பேசி அரசியல் ஆதாயம் தேடவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மாபெரும் கூட்டம் டெல்லி அல்லது உத்தரப்பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்படுகிறது. அதேசமயம், நாடு முழுவதிலும் பாஜக 2019 இல் வென்ற 303 தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் பெயரில் வெற்றி விழா கூட்டங்களும் நடைபெற உள்ளன.

இக்கூட்டங்கள் நடைபெறும் தொகுதிகளை பொறுத்து அவற்றுக்கு மத்திய அமைச்சர்களும், மூத்த எம்பிக்களும் தலைமை தாங்க உள்ளனர். இவற்றில், அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான மாநிலங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. பிரதமர்மோடி அரசின் முக்கிய நலத்திட்டங்களும் அதன் சாதனைகளும் இக்கூட்டங்களில் எடுத்துரைக்கப்பட உள்ளன. இதன் பலன் பாஜகவிற்கு வரும் மக்களவைத் தேர்தலில் கிடைக்கும் வகையில் ஒரு மாதமாக இந்த விழா தொடர உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘இந்த கூட்டங்களுக்காகப் பொதுமக்கள் ஆதரவை திரட்டும் வகையில், பல்வேறு பிரிவுகளின் முக்கியப் பிரபலங்களை மேடை ஏற்றவும் திட்டம் உள்ளது.

இந்த ஒரு மாத விழாவை, நமது கர்நாடகா ஆட்சி இழப்பையும் மறக்கடிக்கச் செய்யும் வகையில் நடத்துவோம். நம் நாட்டில் இதுவரை இல்லாத வகையில், தொடர்ந்து மூன்றாம் முறையாக பிரதமராகி சாதனை புரிய உள்ளார் மோடிஜி.’ எனத் தெரிவித்தனர்.

தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றதால், உத்தரப்பிரதேசம் பாஜகவின் கோட்டையாக மாறுவதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை தக்கவைக்க அனைத்துவகை முயற்சிகளையும் பாஜக எடுத்து வருகிறது.

பிரதமர் பதவியின் ஒன்பதாம் ஆண்டு விழாவின் உத்தரப்பிரதேச கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து பாஜக தனது மக்களவை தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டங்களை முதல் கட்சியாகத் துவங்கவும் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE