“கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு வித்திட்டது ஒரே ஒரு காரணம்தான்” - ராகுல் காந்தி பேச்சு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: "தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை உங்களுக்கு வழங்குவோம்" என்று கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் அரசின் பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி கே சிவகுமாரும், அவர்களுடன் 8 அமைச்சர்களும் சனிக்கிழமை (மே 20) பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்கான பிரம்மாண்ட விழா பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு நிகழ்வு முடிந்த பின்னர் விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, "இந்தப் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. கர்நாடகா மாநில மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் ஊடகங்கள் இந்த வெற்றியைப் பற்றி பல விதமாக எழுதின. பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சி எவ்வாறு வெற்றி பெற்றது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்த வெற்றிக்கு வித்திட்டது ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. ‘நாங்கள் ஏழைகள் பக்கம், தலித்துகள் பக்கம், ஆதிவாசிகள் பக்கம், பிற்படுத்தப்பட்டவர்கள் பக்கம் நின்றோம். எங்களிடம் உண்மை இருந்தது’ என்பதே அந்த ஒற்றைக் காரணம். பாஜகவிடம் பணம், போலீஸ் மற்றவை இருந்தன. ஆனால், கர்நாடகா மக்கள் அவர்களின் எல்லா அதிகாரங்களையும் தகர்த்தெறிந்துள்ளனர்.

நாங்கள் உங்களுக்கு 5 வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளைத் தராது என்று கூறியிருந்தோம். நாங்கள் கூறியதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். இன்னும் 1 - 2 மணி நேரத்தில் இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் இந்த 5 வாக்குறுதிகளும் சட்டமாக்கப்படும். நாங்கள் உங்களுக்கு தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் ஷோரன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா, தேசிய மாநாடு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் கேசிஆர் கலந்துகொள்ளவில்லை.

முன்னதாக, கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில், 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் வியாழக்கிழமை காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது. இந்தநிலையில், அவர்கள் 8 அமைச்சர்களுடன் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர் தோல்விகளில் திணறி வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றி பெரும் ஊக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த பதவி ஏற்பு விழா 2024 மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான விழாவாகவும் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE