கர்நாடகா | சித்தராமையாவுடன் இன்று கேபினட் அமைச்சர்கள் 8 பேர் பதவியேற்பு: காங்கிரஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் கூடவே 8 அமைச்சர்களுக்கும் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது.

2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடரவும் அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வராகவும், அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்.

8 அமைச்சர்கள் யார்?

இன்று முதல்வர், துணை முதல்வருடன் கேபினட் அமைச்சர்கள் 8 பேரும் பதவியேற்கின்றனர். ஜி.பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, பி.இசட்.ஜமீர் அகமது கான் ஆகிய 8 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.

இந்த விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றன‌ர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE