ரூ.2,000 நோட்டுகள் | “பணமதிப்பிழப்பு முட்டாள்தனம் என்பது உறுதியானது” - ப.சிதம்பரம் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: "எதிர்பார்த்ததைப் போலவே மத்திய அரசும், ரிச்ர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றுள்ளதோடு, இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள செப்.30 வரை அவகாசம் அளித்துள்ளது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 2016ல் நாங்கள் கூறியது சரி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு செய்த மிகப்பெரிய பிழையை சமாளிக்க, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது முட்டாள்தன நடவடிக்கை என்பது உறுதியானது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் சில வாரங்கள் கழித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 500 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகப்படுத்தும் நிர்பந்தத்துக்கு உள்ளாகின. எனவே ரிசர்வ் வங்கி 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும் என்று அறிவித்தது. | விரிவாக வாசிக்க > ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி - செப்.30 கடைசி நாள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE