நவீன இந்திய வரலாற்றில் 4 குஜராத்திகள் மகத்தான பங்களிப்பு: அமித் ஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டுக்காக 4 குஜராத்திகள் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜத்தின் 125-ம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அமித் ஷா ஆற்றிய உரை விவரம் வருமாறு: "நவீன இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொராஜ் தேசாய், நரேந்திர மோடி ஆகிய 4 குஜராத்திகள் நாட்டுக்காக பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் முயற்சிகள் காரணமாக நாடு சுதந்திரம் பெற்றது. சர்தார் வல்லபாய் படேலின் முயற்சிகள் காரணமாக நாடு ஒருங்கிணைந்தது. மொராஜ் தேசாயின் முயற்சிகள் காரணமாக நாட்டின் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது. நரேந்திர மோடியின் முயற்சிகள் காரணமாக உலகம் முழுவதும் இந்தியா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 4 குஜராத்திகளின் சாதனைகள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.

நாடு முழுவதும் மட்டுமல்ல; உலகம் முழுவதும் குஜராத்திகள் வாழ்கிறார்கள். குஜராத்தி சமூகம் எப்போதுமே பிற சமூகங்களோடு இரண்டறக் கலந்து சேவை செய்யக்கூடியது. டெல்லியில் வாழும் குஜராத்திகள் தங்களின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தோடு எப்போதுமே தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்கள். இதற்கான ஊக்கத்தை டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜம் வழங்கி வருகிறது. இந்த சமாஜம் 125 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதற்காக வாழ்த்துகள்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு மிகப் பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக ஆன போது பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தில் இருந்தது. அது தற்போது 5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், பொருளாதாரத்தில் உலகின் ஒளிப்புள்ளியாக இந்தியா திகழ்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடியின் தீர்க்கமான தலைமை காரணமாக இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதன்மூலம் இந்திய எல்லையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்ற செய்தியை உலகிற்கு வழங்கியது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சட்டத்தை நமது அரசு ரத்து செய்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்பின்மையை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக நாட்டில் எங்கும் மிகப் பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் என்று எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்காகவும், எல்லை பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்கும் நோக்கில் 130 கோடி மக்களுக்கு தொய்வற்ற முறையில் தடுப்பூசிகளை விநியோகித்தது. தற்போது மொபைல் ஃபோன் உற்பத்தியில் உலகின் முதல் நாடாக இந்தியா உள்ளது. மோடி எல்லோருக்குமானவராக இருக்கிறார். எல்லோரையும் தனக்கானவர்களாக அவர் கருதுகிறார். இதுதான் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது" என்று அமித் ஷா உரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE