“இலாகா மாற்றம் தண்டனையல்ல; அரசின் திட்டம்” - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டத் துறையில் இருந்து புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டது தண்டனையல்ல என்றும், இது அரசின் திட்டம் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டார். அவர் வகித்து வந்த சட்டத் துறை அமைச்சர் பதவி அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு வழங்கப்பட்டது. புவி அறிவியல் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கிரண் ரிஜிஜு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜு, "எதிர்க்கட்சிகள் நிச்சயமாக என்னை விமர்சிக்கத்தான் செய்வார்கள். எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக பேசுவது ஒன்றும் புதிதல்ல. இந்த மாற்றம் தண்டனையல்ல. இது அரசின் திட்டம். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை" என்று தெரிவித்தார்.

முன்னதாக, கிரண் ரிஜிஜு சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக் தாக்கூர், "கிரண் ரிஜிஜு ஒரு தோல்வி அடைந்த சட்ட அமைச்சர். அவரால் புவி அறிவியல் துறையில் என்ன செய்ய முடியும்? புதிய சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அர்ஜுன் ராம் மேக்வால், முதிர்ந்த அணுகுமுறை கொண்டவராக இருப்பார் என நம்புவோம்" என்று தெரிவித்தார்.

சட்ட அமைச்சர் பதவியில் இருந்து கிரண் ரிஜிஜு நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் சட்ட அமைச்சரான கபில் சிபல், "கிரண் ரிஜிஜு தற்போது சட்ட அமைச்சர் அல்ல; புவி அறிவியல் துறை அமைச்சர். சட்டத்தின் பின்னால் இருந்த அறிவியலை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல. வாழ்த்துகள் கிரண் ரிஜிஜு" என்று தெரிவித்தார்.

இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, "உலகின் மிகப் பெரிய கட்சி என தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சியில், முழு நேர சட்ட அமைச்சரை நியமிக்கக்கூட யாரும் இல்லை . கட்சிக்குள் திறமையானவர்கள் இல்லை என்பது மட்டுமல்லாது, அரசிலும் திறமையானவர்கள் இல்லை என்பதையே இது காட்டுகிறது" என விமர்சித்திருந்தார்.

சட்ட அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத் தனது பதவியை ராஜினமா செய்ததை அடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி சட்ட அமைச்சராக பதவியேற்றவர் கிரண் ரிஜிஜு. பதவியேற்று 2 ஆண்டுகள்கூட இன்னும் நிறைவடையாத நிலையில், அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு துறைக்கு மாற்றப்பட்டிருப்பது டெல்லி அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE