மேற்கு வங்க வெடிவிபத்து: முக்கிய குற்றவாளி பானு பேக் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 16-ம் தேதி நிகழ்ந்த வெடிகுண்டு தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கிய தொழிற்சாலை உரிமையாளர் பானு பேக் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தப்பியோடிய குற்றவாளி: மேற்கு வங்கத்தின் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள காடிகுல் என்ற கிராமத்தில் பானு பாக் என்பவர் சட்டவிரோதமாக வெடிகுண்டு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த வெடிகுண்டு தொழிற்சாலையில் கடந்த 16-ம் தேதி நேரிட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பானு பேக் உள்பட பலர் படுகாயமடைந்தனர். பானு பேக் சட்டவிரோதமாக தொழிற்சாலையை நடத்தி வந்ததால் அவரை அவரது மகனும், மருமகனும் ஒடிசாவுக்குக் கொண்டு சென்று அங்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், பானு பேக் ஒடிசாவின் கட்டாக்கில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்தனர். அவர் தப்பி ஓட உதவிய மகன் பிரித்விஜித் பேக், மருமகன் இந்திரஜித் பேக் ஆகியோரையும் கைது செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பானு பேக் இன்று அதிகாலை காலமானார்.

பாஜக குற்றச்சாட்டு: ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்த பானு பாக், தனது அரசியல் பின்னணியைப் பயன்படுத்தியே சட்டவிரோதமாக வெடிமருந்து தொழிற்சாலையை குடிசைத் தொழில்போல நடத்தி வந்ததாக மேற்கு வங்க பாஜக குற்றம் சாட்டியது. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கில் அவர்களுக்கு எதிராக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த இங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அது குற்றம் சாட்டியது.

தீவிரமடையும் விசாரணை: இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார், இந்த வெடிவிபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த வெடிவிபத்து குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த முன்வந்தால் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வெடிவிபத்து குறித்து மேற்கு வங்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE