புதுடெல்லி: மேற்குவங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பாலிவுட் தயாரிப்பாளர் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. ஆனால் மேற்குவங்கத்தில் படத்தை வெளியிட அந்த மாநில அரசு தடை விதித்தது. தமிழகத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல்கள் எழுந்தன.
மேற்குவங்கம், தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்பட தயாரிப்பாளர் விபுல் ஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
» கோலிவுட் ஜங்ஷன்: கிராமத்து ஆர்யா!
» முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் - இலங்கையில் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இ்ந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பர்திவாலா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி கூறும்போது, “தமிழக அரசு சார்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவே திரைப்படத்துக்கு தடை விதிக்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
மேற்குவங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி வாதிடும்போது, “கற்பனையின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்டது என்று தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும். பொதுமக்களை தவறாக வழிநடத்த அனுமதிக்கக்கூடாது" என்று வாதிட்டார்.
திரைப்பட தயாரிப்பாளர் விபுல் ஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, ஹபிஷா அகமதி கூறியதாவது:
சட்டம், ஒழுங்கு பிரச்சினையால் திரைப்படத்தை வெளியிட தடைவிதித்திருப்பதாக மேற்குவங்க அரசு கூறுகிறது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்த மாநில அரசின் கடமை. திரைப்படத்துக்கு தடை விதித்தது தவறு.
தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடவில்லை என்று கூறுவது பொய்யான தகவல். தமிழகத்தில் திரைப்படத்தை வெளியிட போதிய பாதுகாப்பு வழங்க அந்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். திரைப்படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டும். அதன்பிறகு தெளிவான முடிவு எடுக்க முடியும்.
இவ்வாறு ஹரிஷ் சால்வே, ஹபிஷா அகமதி வாதிட்டனர்.
முஸ்லிம் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கூறும்போது, “திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் மிகவும் மோசமாக உள்ளன. அந்த வசனங்கள், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு கூறியதாவது:
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதித்து கடந்த 8-ம் தேதி மேற்குவங்க அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி திரைப்படத்துக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது. மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மீதான தடை நீக்கப்படுகிறது.
தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளுக்கும் மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்தை தடுப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ படத்துக்கு தடை விதிக்கக்கூடாது.
கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த புள்ளிவிவரம் உறுதியானது கிடையாது, கற்பனையானது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம், திரைப்படத்தில் குறிப்பிட வேண்டும்.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை விசாரிப்பதற்கு முன்பாக திரைப்படத்தை பார்க்க முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு முடிவு எடுக்கப்படும். எனவே இதுதொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 2-வது வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago