கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா; துணை முதல்வராகிறார் டி.கே.சிவகுமார் - புதிய அரசு நாளை பதவியேற்பு

By இரா.வினோத்


பெங்களூரு/புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் ஆகியோர் பெங்களூருவில் நாளை நடைபெறும் விழாவில் பதவி ஏற்கின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது.

கடந்த 14-ம் தேதி பெங்களூருவில் கூடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து, மூத்த தலைவர்களுடன் கார்கே ஆலோசனை நடத்தினார். அப்போது, "கர்நாடக அரசியலை நன்கு அறிந்த கார்கே, முதல்வர் தேர்வு விவகாரத்தில் தன்னிச்சையாக‌ முடிவெடுக்க வேண்டும்" என்று ராகுல் அறிவுறுத்தினாராம்.

இதையடுத்து, சித்தராமையா, டி.கே.சிவகுமாரை டெல்லிக்கு அழைத்த கார்கே, பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டது.

பின்னர், சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது, கட்சியின் நலன், மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஒற்றுமையாக செயல்படுமாறு ராகுல் அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கிடையே, சிம்லாவில் இருந்த சோனியா காந்தி, டி.கே.சிவகுமாரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சில வாக்குறுதிகளை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க சம்மதம் தெரிவித்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் கூறும்போது, "மக்களவைத் தேர்தல் முடியும்வரை டி.கே.சிவகுமார், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகத் தொடர்வார். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா வரும் 20-ம் தேதி (நாளை) பெங்களூருவில் நடைபெறும்" என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பதிவில், "மாநில வளர்ச்சி, 6.5 கோடி மக்களின் நலனில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டி.கே.சிவகுமார் கூறும்போது, "கட்சி மேலிட முடிவை ஏற்றுக் கொள்கிறேன். கர்நாடக மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம்'' என்றார். ஆனால், அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான‌ டி.கே.சுரேஷ் கூறும்போது, "எனக்கு முழுமையான‌ மகிழ்ச்சி கிடைக்கவில்லை. டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காததில் வருத்தம்தான்" என்றார்.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, தேசிய அளவிலான தலைவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இருந்து நேற்று மாலை பெங்களூரு திரும்பிய சித்தராமையாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஆட்சி அமைக்க உரிமை: பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த அவர், ஆட்சி அமைப்பதற்கான உரிமையைக் கோரினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்