நாஜி ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லரை யூதமக்கள் தங்கள் அகிம்சை மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி அறிவுரை வழங்கியுள்ளார், ஆனால் அராபிய பாலஸ்தீனர்களின் வன்முறைக்கு காந்தி இணக்கமாக இருந்தார் என்று ஜே.என்.யு. பல்கலைக் கழகப் பேராசிரியர் பி.ஆர்.குமாரசுவாமி தனது புதிய நூல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“Squaring the Circle: Mahatma Gandhi and the Jewish National Home” என்ற நூலை எழுதியுள்ள பி.ஆர்.குமாரசுவாமி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் குறித்த மகாத்மா காந்தியின் எழுத்துக்களை அவரது செயலாளர் பியாரேலால் வெளியிடவில்லை என்றும், யூதாயிஸம் பற்றிய காந்தியின் புரிதலும் மட்டுப்பட்டதே என்றும் பேராசிரியர் விமர்சனம் செய்துள்ளார்.
பாலஸ்தீனம் மீதான அராபிய உரிமைக்காகக் காந்தி பேசிய தருணத்தைக் குறிப்பிட்ட பேராசிரியர் குமாரசுவாமி, “கிலாபத் காலக்கட்டத்தில் இஸ்லாமிய நாட்டின் முன்னுரிமைகளை அரவணைத்த மகாத்மா காந்தி, பாலஸ்தீனம் மீதான இஸ்லாமியர் அல்லாத கட்டுப்பாட்டை திட்டவட்டமாக மறுத்தார், ஆனால் ஒருபுறம் ஹிட்லருக்கு எதிராகக் கூட அஹிம்சையைக் கடைபிடிக்க யூதர்களை வலியுறுத்திய காந்தி பாலஸ்தீனத்தில் அராபிய வன்முறைக்கு இணக்கமாக இருந்தார். இது அஹிம்சை மீது அவரது வாழ்நாள் முழுதுமான கடப்பாடு மீது ஐயங்களை எழுப்புகிறது” என்றார்.
பேராசிரியர் குமாரசுவாமியின் கருத்துகளை ஜாமியா மிலியா இஸ்லாமியா இந்தியா-அரபுக் கலாச்சார மையத்தின் இயக்குநர் டாக்டர் ஸிக்ருர் ரஹ்மான் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.
மகாத்மா காந்தியின் போதனைகளை மிகவும் குறுகிய முறையில் புரிந்து கொண்டுள்ளார் பேராசிரியர் என்கிறார்.
“உலகில் எந்த மூலையிலும் எந்த ஒரு குழுவின் வன்முறையையும் மகாத்மா காந்தியின் எழுத்து ஒரு போதும் ஆதரித்ததில்லை. இங்கிலாந்து எப்படி இங்கிலிஷ் மக்களுக்கானதோ அதே போல் பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தமானது என்றார். இதனை எந்த ஒரு கல்வியியல் பரந்துபட்ட அறிவின் மூலமாகவும் இஸ்ரேல் யூதர்களுக்கு எதிரான பாலஸ்தீன வன்முறைகளை காந்தி ஆதரித்ததாக வியாக்கியானம் அளிக்கப்பட முடியாதது.
யூதத் தலைவர்களில் பலருடன் மகாத்மா காந்தி நெருக்கமாகவே இருந்தார். ஹெர்மன் காலென்பாக் போன்றோருடன் நெருக்கமாக இருந்தார் காந்தி. எனவே இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற சிக்கலான பிரச்சினைகளில் ஒற்றைப் பரிமாண பார்வைகளை செலுத்துவது வரலாற்று ரீதியாக சரியாகாது” என்றார்.
ஜேஎன்யு. பன்னாட்டு ஆய்வுகள் பள்ளியில், மேற்காசிய ஆய்வுகள் மையத்தில் இஸ்ரேலிய அயலுறவுகள் பற்றிய பாடங்களை நடத்தி வரும் பேராசிரியர் குமாரசுவாமி, மேலும் கருத்து தெரிவிக்கையில், மகாத்மா காந்தியின் நீண்ட கால செயலாளர் பியாரேலால், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தங்கள் சொந்த இடத்தை மீட்டெடுக்க யூதர்களின் உரிமைகள் பற்றிய காந்தியின் முக்கியமான எழுத்துக்களை அடக்கியதற்குக் காரணமானவர் என்று குற்றம்சாட்டினார்.
பேராசிரியர் மேலும் கூறும்போது, உலக சீயோன் அமைப்பின் தலைவரான நஹாவ்ம் சோகலோவ் என்பவரை அக்டோபர் 15, 1931-ல் மகாத்மா காந்தியை இன்னொரு உறுப்பினருடன் லண்டனில் சந்தித்தார், அதாவது பாலஸ்தீனம் தொடர்பாக விவாதிக்கவே அவர் காந்தியைச் சந்தித்தார். ஆனால் மகாத்மா காந்தி எழுத்துக்கள் தொகுப்பில் இந்தச் சந்திப்பின் விவரங்கள் இல்லை என்றார்.
மேலும் பேராசிரியர் பி.ஆர்.குமாரசுவாமி கூறும்போது, யூதாயிஸம் பற்றிய காந்தியின் புரிதல் வெறும் சடங்குகள் சம்பிரதாய அளவிலேயே இருந்தது மேலும் யூதர்களுக்கு எதிரான இஸ்லாமிய, கிறித்துவ முன் அனுமானங்களை மனதில் கொண்டிருந்தார், என்கிறார்.
பிற்காலத்தில் காந்தியின் செயலாளர் பியாரேலால் இஸ்ரேல் பற்றிய காந்தியின் சிந்தனைகளையும் கருத்துகளையும் தான் வெளியிடாமல் மறைத்ததாக ஒப்புக் கொண்டதாக தன் நூலில் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago