கர்நாடக துணை முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை சம்மதிக்க வைத்ததன் பின்னணியில் சோனியா காந்தி?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடக முதல்வர் பதவியைப் பெற கடும் முயற்சி மேற்கொண்ட டி.கே.சிவகுமார், துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் சோனியா காந்தி இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றது. இருந்தபோதிலும், முதல்வரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் போட்டியிட்டதால், இருவரும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இருவரிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். 2013 முதல் 2018 வரை முழு பதவிக் காலத்தை பூர்த்தி செய்து மாநிலத்தில் நிலையான அரசை தந்தவர் சித்தராமையா என்பதால் மீண்டும் அவரையே முதல்வராக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதை, ஏற்க சிவகுமார் மறுத்து வந்ததால், மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று மாலை சிவகுமாரிடம் பேசி உள்ளார். அப்போது, துணை முதல்வர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்தே, சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், "நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் நடைபெறுவதும்; இறுதியில் நீதிபதியின் தீர்ப்பை ஏற்பதும் எவ்வாறு வழக்கமோ அதுபோலத்தான் இதுவும். கர்நாடகாவில் நீங்கள் நல்லாட்சியை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என சோனியா காந்தி என்னிடம் கூறினார். நான் தற்போது இந்தப் பொறுப்பில் இருப்பதற்குக் காரணம், நான் எனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால்தான். அரசியலில் அடிப்படை நாகரிகம்; அடிப்படை நன்றியுணர்வு முக்கியம்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE