கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமார், சித்தராமையா இடையே கடும் போட்டி

By செய்திப்பிரிவு

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி. பாட்டீல் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது.

ஒக்கலிகா, லிங்காயத், குருபா, பட்டியலின‌ சாதி சங்கங்களும், மடாதிபதிகளும் தங்களது சாதியை சேர்ந்தவருக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். முஸ்லிம் அமைப்பினர் தங்களது மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு துணை முதல்வர், 5 அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வுக்கு வழங்கி கடந்த 14-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர்.

இதையடுத்து டெல்லி சென்ற மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, வேணு கோபால், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ராகுல் காந்தி, கர்நாடகாவை சேர்ந்த‌ கார்கே தலைவராக இருப்பதால் அவரே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கட்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரையும் டெல்லி வரவழைத்து கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் முதல்வர் பதவியை கேட்டு அடம்பிடிப்பதால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்ட முடியவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே இருவரையும் தனித்தனியாக அழைத்து பேசினார். அப்போது டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும், 6 துறைகள் ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த டி.கே.சிவகுமார், 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு சித்தராமையாவே காரணம். 2020-ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கும் அவரே காரணம். எனவே அவரை முதல்வராக்க அனுமதிக்க மாட்டேன் என கூறியதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்து பேசினர்.

டி.கே.சிவகுமார் தரப்பில், ‘‘என்னை முதல்வராக்குங்கள். இல்லாவிட்டால் கார்கேவை முதல்வராக்குங்கள். ஏனெனில் கர்நாடகாவில் தலித் ஒருவர் இதுவரை முதல்வர் ஆக்கப்பட‌வில்லை. கார்கேவை முதல்வராக்கினால் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு நல்ல பலன்கிடைக்கும். நான் கட்சித் தலைவராகவே பணியாற்றுகிறேன். அமைச்சரவையில் இடம்பெற‌ மாட்டேன்’’ என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிவிப்பு: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, ‘‘இன்னும் முதல்வர் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தவறான செய்திகளை நம்ப வேண்டாம். பாஜகவினர் திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இன்னும் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் முதல்வர், அமைச்சரவை விவரம் அறிவிக்கப்படும்' 'என்றார்.

இதனிடையே சித்தராமையா வும், டி.கே.சிவகுமாரும் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE