கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By இரா.வினோத்


புதுடெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீது ஜூலை 14‍-ம்தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத‌ ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின ஆவணங்கள் சிக்கின.

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்த நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற‌ப்பட்டது. அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட‌து.

இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார்மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10-ம்தேதி சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட‌து.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.கே.சிவகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘இந்த வழக்கு வரும் மே 23-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் விடுமுறை கால அமர்வு இதனை விசாரிக்கக் கூடாது'' என தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகுமார் முயற்சித்து வருகிறார். அவர் மீதானவழக்குகளை காரணம் காட்டி, முதல்வர் பதவியை வழங்க மறுப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஜூலை 14-ம் தேதி வரை அவரை விசாரிக்க சிபிஐக்கு தடை தொடர்வதால், டி.கே.சிவகுமார் நிம்மதி அடைந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE