“பீதியை ஏற்படுத்தாதீர்கள்...” - அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனைகளைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள். எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. ஒரு நடவடிக்கைக்கு முன்னர் அங்கே ஏற்கெனவே குற்றம் நடந்ததை உறுதி செய்துகொண்டு களமிறங்குங்கள்" என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தொடர்ந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் இவ்வாறாக தெரிவித்துள்ளது.

ரூ.2000 கோடி ஊழல் சர்ச்சை: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில வாணிப கழகம் வாயிலாக மதுபான கொள்முதல், விற்பனை நடைபெறுகிறது. இதன் கட்டுப்பாட்டில் 800 கடைகள் உள்ளன. இங்கு மதுபான விற்பனையில் பெரும் மோசடி நடைபெற்று உள்ளதாக வருமானவரித்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் மாநில தொழில் மற்றும் வர்த்தகதுறை செயலாளராக உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா உள்ளிட்ட சிலர் மீது புகார் கூறப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை முதல்வருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்தில் இந்த வழக்கைக் கையாள்வதாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

பீதியை ஏற்படுத்தாதீர்கள்.. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அசானுதீன் அமனுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரன மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த வழக்கில் சத்தீஸ்கரைச் சேர்ண்டஹ் 52 அதிகாரிகள் தாங்கள் அமலாக்கத்துறையால் அரசுக்கு எதிராக சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர். முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் தரும்படி நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். அமலாக்கத் துறையின் நிஜமான இலக்கு முதல்வர் தான். ஊழல் வழக்குகளை மாநில அரசு கையாளும் அதிகாரம் இருக்கையில் அந்த உரிமையை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது" என்று வாதிட்டார். தொடர்ந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதங்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் "அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனைகளைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. ஒரு நடவடிக்கைக்கு முன்னர் அங்கே ஏற்கெனவே குற்றம் நடந்ததை உறுதி செய்துகொண்டு களமிறங்குங்கள். ஒருவேளை ஊழல் நடந்திருந்தால் சரியான நபரைப் பிடியுங்கள். அதைவிடுத்து அச்சமான சூழலை உருவாக்காதீர்கள்" என்று அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE