ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் டெல்லி, பிஹாரில் சிபிஐ சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக டெல்லி, பிஹாரில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே துறையில் வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் சுமார் 4 ஆயிரம் பேரிடம் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. முதல்கட்ட விசாரணையில் ரூ.600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் லாலு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக டெல்லி, பிஹாரில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

குறிப்பாக, ஆர்ஜேடி கட்சியின் மாநிலங்களவை எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரேம் சந்த் குப்தாவுக்கு சொந்தமாக டெல்லி, நொய்டா, ரேவரி, குருகிராம் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல பிஹார் ஆர்ஜேடி எம்எல்ஏ கிரண் தேவிக்கு சொந்தமாக பாட்னா மற்றும் பிஹாரின் ஆரா நகரில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கிடைத்தன.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நிலங்களை பெற்றுக் கொண்டு ரயில்வேயில் வேலைகளை வழங்கினார். இதற்கு ஆர்ஜேடி எம்பி பிரேம் சந்த் குப்தா, எம்எல்ஏ கிரண் தேவி இடைத்தரகர்களாக செயல்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக இருவரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி உள்ளோம். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன’’ என தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE