சித்தராமையா Vs டி.கே.சிவகுமார் | தேர்தல் வெற்றிகளை விட முதல்வர்களை தேர்ந்தெடுப்பதே காங்கிரஸுக்கு கடினம்?
சென்னை: அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. இருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது.
இருவரும் ‘நீயா? நானா?’ போட்டியில் நிற்கின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிக்காமல் உள்ளது. தலைநகர் டெல்லியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் என இருவரும் முகாமிட்டுள்ளனர். அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இது மாதிரியான கோஷ்டி பூசல் உருவாவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பலமுறை பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, முதல்வர் யார் என்பதில் குழப்பங்கள் நிலவியுள்ளன. சமயங்களில் காங்கிரஸ் கட்சி தலைமையின் முடிவு அந்தக் கட்சிக்கே பாதகமாகவும் அமைந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.
- கடந்த 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத முன்னாள் எம்.பி நாராயணசாமியை முதல்வராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. அதன் காரணமாக 2021 தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி கவிழ்ந்தது. அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த நமச்சிவாயம், பாஜகவில் இணைந்தார். 2021 தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது.
- 2018 ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் முடிவை அடுத்து அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு அசோக் கெலாட் முதல்வராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. வரும் டிசம்பரில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
- கடந்த 2017 பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை அடுத்து அமரிந்தர் சிங் முதல்வர்க காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இருந்தும் 2021 செப்டம்பரில் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி சரண்ஜித் சிங் சன்னியை நியமித்தது காங்கிரஸ். இதன் பின்னணியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இருந்தார்.
- அதே 2018 மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் 114 தொகுதிகளில் வென்று சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் முடிவு இது. இருந்தும் 2020-ல் 22 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர். அவர்கள் அனைவரும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் பாஜக-வில் இணைந்தனர். அதனால் அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பாஜக அந்த மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. பாஜக-வின் சிவ்ராஜ் சிங் சவுகான் தற்போது முதல்வராக உள்ளார்.
- இதற்கு முன்னர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா (அசாம் மாநில முதல்வர்), ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திர பிரதேச மாநில முதல்வர்) ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது முதல்வராக இருந்து வருகின்றனர்.
- இப்படியாக காங்கிரஸ் கட்சியின் முதல்வர் தேர்வு சார்ந்த முடிவால் கசந்த அனுபவமே நடந்துள்ளது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த முறை காங்கிரஸ் தலைமை தெளிவான முடிவை எடுக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் இருக்கலாம். அதோடு வரும் 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற உள்ள மாநிலத் தேர்தல்களையும் காங்கிரஸ் கட்சி தலைமை கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுக்கும் என நம்பப்படுகிறது.