அடுத்தடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள்: டெல்லி மெட்ரோ ரயில்களில் ரோந்துப் பணியை அதிகரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பயணிகள் சிலரின் விரும்பத்தகாத செயல்களின் வீடியோக்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வைரலானதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் காவலர்களின் ரோந்தை அதிகப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளில் சிலர் சகபயணிகளை கூசச் செய்யும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தநிலையில், சமீபத்தில், டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்திருக்கும் இளம் ஜோடி ஒன்று முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், ரயில் நிலையங்களிலும் பெட்டிகளிலும் ரோந்து பாதுகாப்பினை அதிகப்படுத்தும்படி டெல்லி போலீஸுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோந்து நடவடிக்கை முடிவு குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த சில சம்பவங்களைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் சீருடையணிந்த காவலர்கள் மற்றும் சாதாரண உடையில் இருக்கும் டெல்லி மெட்ரோ பணியாளர்களை ரோந்து வரச் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

ஒரு பழைய வழித்தடத்தைத் தவிர அனைத்து வழித்தடங்களில் ஓடும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தற்போது நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் மூலம் கேமராக்கள் இல்லாத பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் அனைத்து விரும்பத்தகாத நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களைத் தடுத்த உதவும்" என்று அவர் தெரிவித்தார்.

மெட்ரா ரயிலில் ஜோடிகள் முத்தமிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பயனர்கள், இச்சம்பவம் குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மறுபுறம் சிலர் இந்தச் சம்பவத்தை படம் பிடித்தது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைப் பார்க்கும் பயணிகள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் மெட்ரோ பணியாளர்கள் அல்லது பாதுகாப்புப் பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் புகார் தெரிவிக்கும்படி டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

மேலும், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அதன் சமூக வலைதள பக்கங்கள் வழியாக, மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் யாரும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் எடுப்பது, ரீல்ஸ் உருவாக்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அதன் சொந்த பறக்கும் படையினர் மூலமாக தினமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE