'இந்திய விண்வெளி துறைக்கு ரூ.1 செலவிட்டால் நாட்டுக்கு ரூ.50 மதிப்பில் பயன்' - விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய விண்வெளி துறைக்கு ரூ.1 செலவிட்டால் நாட்டு மக்களுக்கு ரூ.50 மதிப்பில் பயன் கிடைக்கும் என்று விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் இணைந்து ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ என்ற நூலை எழுதியுள்ளனர். தருமபுரி ‘தகடூர் புத்தகப் பேரவை’ சார்பில், இந்நூலின் இணையவழி அறிமுக நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் அறிவுமணி நூலை அறிமுகம் செய்தார்.

பின்னர் விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசும்போது, “இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிக்கோடிட்டு பேசும் புத்தகமாக இது உள்ளது. இதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறோம். அறிவியலும், தொழில்நுட்பமும் மக்களுக்காக இருக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறோம். எதையும் எழுத்தோடு நின்று விடாமல் செயல் வடிவம் கொடுக்கும் போக்கை இந்த புத்தகம் முன்னெடுக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, “போராடி பெற்ற சுதந்திரம், தக்கவைக்கப்பட வேண்டும். அதற்கு நாம், போர் முனை முதல் ஏர் முனை வரை அறிவியல் துறையில் தன்னிறைவு பெற வேண்டும். நம் மாணவர்களை, எங்களை முன்னுதாரணமாக கொண்டு நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களிடம் விதைக்கிறோம்” என்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்களின் கேள்விகளுக்கு மயில்சாமி அண்ணாதுரை பதில் அளித்தார்.

செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான செலவு பல ஆயிரம் ரூபாய் கோடி செலவு ஆவதாக அறிந்தேன். அதற்கேற்றபடி வருவாய் இருக்கிறதா?

இதுவரை 130-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி இருக்கிறோம். எதற்கும் ரூ.1000 கோடி செலவானதில்லை. ரூ.300 கோடி வரை மட்டுமே செலவாகிறது. சந்திரயான் -2 மட்டும் ரூ.800 கோடி செலவானது. செயற்கைக்கோள் மூலம் வானிலை, விவசாயம், எல்லை பாதுகாப்பு, வானிலை என பல துறைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. செயற்கைக்கோள் மூலம் மீன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்கள் குறித்த விவரங்களை பெற்று பல லட்சம் மீனவர்கள் பயன்பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் பயணிக்கும் தூரம் குறைந்து, டீசல் மிச்சமாகிறது. அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடி. இந்திய விண்வெளி துறை ரூ.1 செலவிட்டால், நாட்டு மக்கள் ரூ.50 அளவில் பயன்பெறுகின்றனர். உலக நாடுகளைவிட இந்தியா விண்வெளித்துறையில் குறைவாகவே செலவிடுகிறது.

திருநள்ளாறு கோயிலுக்கு மேலே செயற்கைக்கோள் வந்தால் செயலிழந்துவிடும் என்று சொல்கிறார்களே?

ஒருசில இடங்களில் திரும்ப, திரும்ப செயற்கைக்கோள்கள் செயலிழந்துவிடும். அது தொடர்பாக ஆய்வு செய்தபோது, அதற்கு மின்னூட்டமயமான கதிரியக்கம் காரணம் என தெரியவந்தது. தெற்கு அட்லாண்டிக்கில் அப்படி ஒரு இடம் இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் செயற்கைக்கோள் செயலிழக்கிறது என்பது உண்மையானால் நாம் ஒரு அறிவியலை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தில் நாங்கள் திருநள்ளாறில் ஆய்வு செய்தோம். ஆனால் எங்கள் ஆய்வில், பிறர் கூறுவது போன்று எந்த செயற்கைக்கோளும் செயலிழக்கவில்லை என தெரியவந்தது.

அப்துல் கலாம் தலைமையில், பொக்ரான் அணு ஆயுத சோதனையை உலக நாடுகளின் கண்காணிப்பு வரம்பில் வராமல் செய்தது எப்படி?

வழக்கமாக நாம் ஏவுகணை சோதனைகளை கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஸ்ரீஹரிகோட்டாவில் மேற்கொள்வோம். அங்கு ஒரு நிகழ்வு நடப்பதாக கூறி, வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள்களை அதன் பக்கமாக திருப்பிவிட்டு, அந்த பகுதிக்கு நேர் எதிர் திசையில் ராஜஸ்தானில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் இரு இடங்களில் கண்காணிக்க முடியாது. அதனால் வெளிநாட்டவரால் இந்த சோதனையை கண்டுபிடிக்க முடியவில்லை. சோதனை முடிந்த பிறகே, அது தொடர்பாக கண்காணிக்க முடிந்தது.

விண்வெளி குப்பை பற்றி?

செயலிழந்த செயற்கைக்கோள்கள் கழிவுகளாக கருதப்படுகிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கள் செயலிழந்த செயற்கைக்கோள்களை தாக்கி அழித்துள்ளது. அதன் மூலம் மறைமுகமாக உலக நாடுகளுக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், பிற நாட்டு செயற்கைக்கோள்களையும் அப்படி தாக்கி அழிக்க முடியும் என்ற எச்சரிக்கைதான். இந்தியாவும் வேறு தொழில்நுட்பத்தில் நமது செயலிழந்த செயற்கைக்கோளை தாக்கி அழித்து, பூமியில் விழ வைத்துள்ளது. சில நாடுகள் உளவு செயற்கைக்கோள்களை அனுப்பும். அதை வெளியில் சொல்வதில்லை. அதையும் கழிவாக பார்க்க முடியும். அதனால் உலக அளவில் எது விண்வெளி கழிவு என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் தகடூர் புத்தகப் பேரவையின் மருத்துவர் செந்தில், ஆசிரியர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE