“அந்தப் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் விட்டுவிடுவோம்” - பிறந்தநாளில் ஆதரவாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்த தனது ஆதரவாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்க மணிக்கணக்கில் பலர் கேக்குகளுடன் காத்திருந்தனர்.

தனது பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஆதரவாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாங்கள் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம். முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சி மேலிடத் தலைமையிடம் ஒப்படைத்துள்ளோம். நான் இன்னும் டெல்லி செல்வது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் நிறைவாக செய்திருக்கிறேன். எனது பிறந்தநாளின்போது காங்கிரஸ் மேலிடம் என்ன மாதிரியான பரிசினைத் தரப்போகிறது என்று எனக்குத் தெரியாது.

ஆனால், கர்நாடகா மக்கள் பெருவாரியான தொகுதிகளில் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். எனது பிறந்தநாளில் நான் அதிகமான நபர்களை சந்திக்க வேண்டியது இருக்கிறது. எனது வீட்டிலும் சில சடங்குகள் இருக்கின்றன" என்று தெரிவித்தார்.

தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், பெங்களூரு ஷங்கரி லா ஹோட்டலில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில், “நான் கடந்த 20 வருடங்களாக சிவகுமாரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறேன். நான் அவருடைய நெருங்கிய உதவியாளர். ஒவ்வொரு வருடமும் நீங்கள் தான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என்ற வாழ்த்துகள் அதில் இருக்கும்” என்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க நீண்ட நேரமாக காத்திருந்த ஷாம்ஷெர் பெய்க் என்பவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு சிவகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தராமையா மற்றும் தனது கட்சி சகாக்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் படங்களைப் பகிர்ந்திருந்தார். மேலும் அதில், "எனது வாழ்க்கை கர்நாடகா மக்களுக்காக சேவை செய்ய அர்ப்பணிக்கப்பபட்டுள்ளது. பிறந்தநாளைக்கு முன்பாக கர்நாடகா மக்கள் சிறந்த பிறந்தநாள் பரிசினை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். என்னை வாழ்த்திய காங்கிரஸ் குடும்பத்திற்கு நன்றி" என்று தெரிவித்திருந்தார்.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 18-ம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, ‘‘இன்றைய கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், தலைவர்கள் இடையே அறிமுக கூட்டம் மட்டுமே நடந்தது. முதல்வரை தேர்வு செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு டி.கே.சிவகுமார், சித்தராமையா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE